தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன், தன்னுடன் பணிபுரிபவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுப்பதாக புகார் கொடுத்துள்ளார்.
தமிழக தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன். சர்வதேச அளவில் 11 பதக்கங்களையும், தேசிய அளவில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்றவர். 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர். அவர் தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராகப் பணிபுரியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தன்னுடன் பணிபுரியும் பயிற்சியாளர் தன்னை சாதி ரீதியாகவும், பாலின அடையாளம் குறித்தும் இழிவாகப் பேசி வருவதாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
செல்வாக்குள்ள அவர், சாந்திக்கு பல ஆண்டுகளாக தொந்தரவு அளித்து வருவதாகவும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாந்தியைப் பயிற்சியாளர் பணி செய்ய விடாமல் அலுவலகப் பணிக்கு மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீடா ஹரீஷ் ’த இந்து’வுக்கு கூறும்போது, ‘இதுதொடர்பாக சாந்தி என்னிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.