ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகளான மனுபாக்கர், யாஷாஸ்வினி தேஸ்வால் ஆகியோர் தகுதிச்சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை இதயம் நொறுங்கக் செய்தனர்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சர்வதேச தரநிலையில் முதலிடம் வகிக்கும் யாஷாஸ்வினி தேஸ்வால் தகுதிச் சுற்றில் 13-ஆவது இடத்தை பிடித்தார். இதே பிரிவில் தரநிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள மனுபாக்கர் 12-ஆவது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இந்திய வீராங்கனைகள் இருவரும் தகுதிச்சுற்றுடன் வெளியேறினர்.
ஒலிம்பிக்கில் முதன்முறையாக பங்கேற்றுள்ள நிலையில், போட்டியின்போது மனுபாக்கரின் துப்பாக்கியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் 5 நிமிடங்கள் வரை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரிவில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீராங்கனை பட்ரஷ்கினா தங்கப் பதக்கத்தையும், பல்கேரிய வீராங்கனை கோஸ்டாடினோவா வெள்ளிப்பதக்கத்தையும், சீன வீராங்கனை ஜியாங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.