விளையாட்டு

ஆப்கன் வீரரை பேட்டால் அடிக்க வந்த பாக். வீரர் ஆசிஃப் அலி-இருக்கையை தூக்கியடித்த ரசிகர்கள்!

ஆப்கன் வீரரை பேட்டால் அடிக்க வந்த பாக். வீரர் ஆசிஃப் அலி-இருக்கையை தூக்கியடித்த ரசிகர்கள்!

சங்கீதா

ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் களத்தில் மோதிக்கொண்டநிலையில், பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ரசிகர்கள் இருக்கையை ஒருவர் மேல் ஒருவர் தூக்கியடித்து மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் சூப்பர் 4 சுற்றில், நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில், 9 விக்கெட்டுகளை இழந்து போராடி 131 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இந்தப் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பேசுபொருளாகியது. அதாவது, ஆஃப்கான் வீரர் ஃபரீத் அகமது வீசிய பந்தில், பாகிஸ்தான் வெற்றிக்கு தனி ஆளாக நின்று போராடிய ஆசிஃப் அலி சிக்ஸர் அடித்துவிட்டு அவரை சீண்டினார்.

இதனைத் தொடர்ந்து ஃபரீத் அகமது வீசிய பந்தில், மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்று ஆசிஃப் அலி அவுட்டானதால், ஃபரீத் அகமது துள்ளிக்குதித்தார். இதனால் கடுப்பான பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி பேட்டை தூக்கி அவரை அடிக்கச் சென்றார். இதனால் ஆஃப்கான் வீரர் ஃபரீத் அகமதுவும் கோபமாக கத்த அங்கு மோசமான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து நடுவர்கள் இருநாட்டு வீரர்களையும் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் பாகிஸ்தான் வெற்றியைப் பொறுத்துகொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் இருந்த இருக்கைகள் மற்றும் பொருள்களை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். அத்துடன், மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மீது இருக்கைகளை கொண்டு தாக்கியதால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து, இரு தரப்பினரும் மைதானத்திற்கு வெளியே சாலைகளிலும் மோதிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஷார்ஜா காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் களத்தில் பேட்டைத் தூக்கி அடிக்க வந்த ஆசிஃப் அலியை அடுத்து வரும் போட்டிகளில் இருந்து தடை செய்யவேண்டும் என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைமை அதிகாரி சஃபீக் காட்டமாக கூறியுள்ளார்.