7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா 4 வெற்றி, 1 டிராவுடன் 13 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், மலேசியா 4 வெற்றி , 1 தோல்வியுடன் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.
தென் கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய 3 அணிகளும் 1 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் தலா 5 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
தென்கொரியாவின் கோல் வித்தியாசம் -1 ஆகவும், ஜப்பானின் கோல் வித்தியாசம் -2 ஆகவும் இருந்தது. பாகிஸ்தான் அணியின் கோல் வித்தியாசம் -5 ஆகும்.
இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் மலேசியா - நடப்பு சாம்பியன் அணியான தென் கொரியா மோதுகின்றன. மலேசிய அணி 'லீக்' ஆட்டத்தில் தென் கொரியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணியும் நம்பிக்கையுடன் விளையாடும்.
இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இந்திய அணி இந்த தொடரில் சீனாவை 7-2 என்ற கோல் கணக்கிலும், மலேசியாவை 5-0 என்ற கணக்கிலும், தென்கொரியாவை 3-2 என்ற கணக்கிலும், பாகிஸ்தான் 4-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. ஆனால் ஜப்பானுடன் 1-1 என்ற கணக்கில் 'டிரா' செய்து இருந்தது. இதனால் இந்திய அணி மிகவும் கவனத்துடன் அரை இறுதியில் வெற்றி பெற முனைப்பு காட்டும்.
இந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராக இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் உள்ளார். அவர் 7 கோல்களை அடித்து உள்ளார். இந்த 7 கோல்களையும் அவர் பெனால்டி கார்னர் மூலமே அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் மோதிய 3 போட்டியில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் 'டிரா' ஆனது. முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான்-சீனா அணிகள் மோதுகின்றன.