ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் இந்தியாவின் கிரண் பலியான் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 72 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இப்பதக்கம் கிடைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவு விளையாட்டுகள் நேற்று தொடங்கின. தொடக்க நாளிலேயே குண்டு எறிதல் போட்டியில் 24 வயது இந்திய வீராங்கனை கிரண் பலியான் 17 புள்ளி 36 மீட்டர் தூரம் வீசி இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில், குண்டு எறிதலில் பார்பரா வெப்ஸ்டருக்கு பின், பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பலியான் பெற்றுள்ளார்.
ஆங்கிலோ இந்தியரான பார்பரா கடந்த 1951 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றிருந்தார். அதற்குப் பின் 72 ஆண்டுகளுக்குப் பின் குண்டு எறிதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. மீரட் போக்குவரத்து தலைமை காவலரின் மகளான பலியான் குண்டு எறிதல் வீராங்கனையானது சுவாரஸ்யமானது.
9 ஆண்டுகளுக்குப் முன் ஜூனியர் நிலையில் நடந்த குண்டு எறிதல் போட்டியில் அவரது பெயர் தவறுதலாக இடம் பெற்றது. எனினும், அதில் அதீத கவனம் செலுத்தி இந்தியாவுக்கு தற்போது பெருமை சேர்த்திருக்கிறார். குண்டு எறிதலில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான மன்ப்ரீத் கவுர், ஐந்தாவது இடத்தை பிடித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கிரண் பலியானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சாதனை புரிந்து வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
குண்டு எறிதலில் வெண்கலம் வென்று தனித்துவமான சாதனையை பதிவு செய்திருக்கும் கிரண் பலியானுக்கு மிகப் பெரிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி அவரது வெற்றியால் ஒட்டு மொத்த தேசமும் மகிழ்ச்சியடைந்திருப்பதாக பதிவிட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் பங்கேற்ற கிரண் பலியான் தனது மூன்றாவது முயற்சியில் 17 புள்ளி 36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார்.