விளையாட்டு

டீ விற்கிறார் ஆசிய வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்

டீ விற்கிறார் ஆசிய வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்

webteam

இந்தோனிஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இடம்பெற்ற ‘செபக் டக்ரா’ போட்டியில் இந்திய ஆண்கள் அணி முதன்முறையாக வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. வெண்கலம் வென்ற இந்திய அணியில் டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் குமாரும் இடம் பெற்றிருந்தார். வெண்கலப் பதக்கம் வென்ற கையொடு தாயகம் திரும்பிய ஹரிஷ் குமார் தற்போது வாழ்க்கையை ஓட்ட தன்னுடைய டீ விற்கும் வேலையை செய்து வருகிறார். ஹரிஷ் குமார் இடம்பெற்ற இந்திய அணி பதக்கம் வெல்லும் வரை செபக் டக்ரா போட்டி அவ்வளவு பிரபலம் கிடையாது. 

ஹரிஷ் குமார் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். அவர்களுக்கு சொந்தமாக ஒரு சிறிய டீ கடை உள்ளது. இந்த டீ கடையில்தான் அவர்களது குடும்பத்தினர் வேலை செய்கிறார்கள். குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாத நிலையில்தான் ஹரிஷ் குமார் வீடு இருந்துள்ளது. மிகவும் கஷ்டமான சூழலிலும் ஹரிஷ் குமாரின் தாய்தான் அவரது பயிற்சிக்கு உதவி வந்திருக்கிறார்.

ரயிலில் செல்லும் போது டிக்கெட் எடுக்கக் கூட பணம் இல்லாமல் மறைந்து மறைந்து பயணம் செய்வாராம். அப்படியும் தவறாமல் தனது பயிற்சியை தொடர்ந்துள்ளார் ஹரிஷ். ஹரிஷ் குமாரின் ஆர்வத்தையும், திறனையும் பார்த்து அவரது பயிற்சியாளர் ஹேம்ராஜ் வியப்படைந்துள்ளார். அவரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று ஸ்டேடியத்தில் தங்க வைத்துள்ளார். பின்னர், இந்திய விளையாட்டு ஆணையம் மாதந்தோறும் ஊக்கத் தொகை கொடுத்து அவனுக்கு உதவியது. 

தன்னுடைய சூழ்நிலை குறித்து ஹரிஷ் குமார் ஏஎன்ஐ-யிடம் பேசுகையில், “என்னுடைய குடும்பத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். குறைந்த அளவில் வருமானம் கிடைக்கிறது. குடும்பத்திற்கு உதவ எனது தந்தையுடன் அவரது டீ கடையில் வேலை செய்கிறேன். என்னுடைய பயிற்சிக்காக தினமும் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை சுமார் 4 மணி நேரம் செலவிடுகிறேன். என்னுடைய குடும்பத்திற்காக எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலையை பெற விரும்புகிறேன். 

2011 ஆம் ஆண்டில் இருந்து நான் செபக் டக்ராவை விளையாடி வருகிறேன். என்னுடைய பயிற்சியாளர் ஹேம்ராஜ் என்னை இந்தப் போட்டிக்குள் கொண்டு வந்தார். இந்திய விளையாட்டு ஆணையத்தில் அவர் தான் என்னை நுழைத்தார். அதில் சேர்ந்த பின்னர், மாதந்தோறும் எனக்கு நிதியும், விளையாட்டுப் பொருட்களும் கிடைத்தது. நாள்தோறும் பயிற்சியை எடுத்துக் கொண்டேன். என்னுடைய நாட்டினை கௌரவப்படுத்த நாள்தோறும் அந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டே இருப்பேன்” என்றார்.

ஹரிஷ் குமாரின் தாய் இந்திரா தேவி பேசுகையில், “என்னுடைய பிள்ளைகளை மிகுந்த சிரமத்திற்கு இடையேதான் வளர்த்தேன். அவருடைய அப்பா ஒரு ஆட்டோ டிரைவர். சிறியதாக ஒரு டீ கடை வைத்திருக்கிறோம். என்னுடைய டீ கடையில் எங்களுக்கு உதவியாக இருக்கிறான். என்னுடைய மகனுக்கு தங்க வசதியும், உணவும் கொடுத்த அரசுக்கு மிக்க நன்றி. எனது மகனின் பயிற்சியாளர் ஹேம்ராஜுக்கும் நன்றி” என்றார். தனது சகோதரருக்கு அரசு வேலை கொடுத்தால் எங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்கிறார் ஹரிஷ் குமார் சகோதரர் தவான்.

ஹரிஷ் குமார் பதக்கம் வென்ற செபக் டக்ரா போட்டியை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வாலிபால், புட்பால், ஜிம்னாஸ்டிக் என மூன்று விளையாட்டுகளின் கலவை இந்த செபக் டக்ரா. கிட்டத்தட்ட வாலிபால் போன்றதுதான் இந்தப் போட்டி. அதனால்தான் இதனை கிக் வாலிபால் என்றும் அழைப்பார்கள்.

இந்த விளையாட்டுக்கான மைதானம் வாலிபால் போட்டிக்கானது போல் இருக்கும். ஆனால், வீரர்கள் கால்பந்தைப் போல் தங்களது கால்கள், முட்டி, தலை போன்றவற்றால் பந்தை தட்டி விளையாடுவார்கள். இந்தப் போட்டியை பார்ப்பதற்கு ஏதோ ஜிம்னாஸ்டிக் போன்றே இருக்கும். அந்த அளவிற்கு கால்களை இதில் பயன்படுத்துவார்கள். 

ஆசியப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தன்னை வரவேற்க யாரும் வரவில்லை என்றும் ஹரிஷ் குமார் கூறியிருக்கிறார். பதக்கம் வென்ற பிறகே இந்த நிலை என்றால், பதக்கம் வெல்ல துடிப்பவர்களுக்கு என்ன நிலையோ?. செபக் டக்ரா போன்ற விளையாட்டினை மேலும் முன்னெடுக்க ஹரிஷ் குமார் போன்ற வீரர்கள் வறுமையில் சிக்காமல் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கப் பெற வேண்டும். அப்பொழுதுதான் உலக அளவில் ஹரிஷ் குமார்கள் நாட்டிற்காக பதக்கங்களை கொண்டு வருவார்கள்.