விளையாட்டு

ஒரே நாளில் இரண்டு தங்கம் ! ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள்

webteam

இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி தடகளத்தில் மேலும் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியது. 

பதக்கப்பட்டியலில் முன்னிலை பெற பன்னாட்டு அணிகளும் துடிக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. மும்முறை தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் தங்கம் வென்றார். 16.77 மீட்டர் தூரம் தாண்டி அவர் முதலிடம் பிடித்தார்.

மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 21 வயதான ஸ்வப்னா பர்மன் மொத்தம் 6026 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்தார். ‌சவாலாக விளங்கிய சீன வீராங்கனை குயின்லிங்கை விட 64 புள்ளிகள் கூடுலாக பெற்று ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை தமதாக்கினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் பிரிவில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். பந்தய இலக்கை 23.30 நொடிகளில் கடந்து அவர் இரண்டாவது இடம் பிடித்தார். 22.96 நொடிகளில் பந்தய இலக்கை கடந்த பஹ்ரைன் வீராங்கனை ஓடியோங் தங்கப்பதக்கத்தை வென்றார். ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை டூட்டி சந்த் பெற்றார்.

டேபிள் டென்னிஸ் கலப்பு ‌இரட்டையர் பிரிவில் ஷரத் கமல்-‌ மனிகா பத்ரா இணை‌ வெண்‌கலப்பதக்கம் வென்றது. அரையிறுதியில் சீனாவின் யிங்ஷா சின்-ச்சூகின் வாங்கின் இணையிடம் கமல்-மனிகா இணை தோல்வியை தழுவியது. அரையிறுதி வரை முன்னேறியதையடுத்து இந்திய இணைக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.

குத்துச்சண்டை பிரிவில் இரண்டு பதக்கங்களை இந்திய வீரர்கள் உறுதிசெய்தனர். ஆடவர் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அமித் பாங்கல் காலிறுதியில், தென்கொரிய வீரர் கிம் ஜாங் ரியாங்கை தோற்கடித்தார். 75 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற விகாஸ் கிரிஷன் காலிறுதியில் , சீன வீரர் தோஹிதா எர்பிக்-கை வீழ்த்தினார்.

மகளிர் ஹாக்கியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதி‌யில் சீன அணியை ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. இறுதிப்போட்டியில் ஜப்பான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.

ஸ்குவாஷ் குழு பிரிவில் இந்திய ஆடவர் ‌மற்றும் மகளிர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இதன் மூலம் அந்தப்பிரிவில் இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

100 தங்கப்பதக்கங்களுக்கு மேல் வென்றுள்ள சீன அணி பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் வீற்றிருக்கிறது. ஜப்பான், தென்கொரியா, ‌இந்தோனேஷியா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 11 தங்கம் உட்பட 54 பதக்கங்களை வென்றுள்ள இந்திய அணி பதக்கப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.