சீனாவின் ஹூலுன்பியர் நகரில், 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், நேற்று (செப்.16) நடைபெற்ற அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான இந்தியா, தென்கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மற்றொரு போட்டியில், சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. இந்த இவ்விரு அணிகளுக்கான இறுதிப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.
இன்றைய போட்டியில் இந்திய அணி, சீனாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை, இந்திய அணி 5 முறை தட்டிச் சென்றுள்ளது.
இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் மலேசியா அணியை எதிர்கொண்ட இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை ஊதித் தள்ளி அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், இந்த தொடரில் இந்திய அணி எந்தப் போட்டியிலும் தோல்வியே சந்திக்காமல் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.