விளையாட்டு

“எங்க நிற்கிறேன்னே தெரியல” - கேப்டன்ஷிப் ‘200’ல் உருகிய தோனி

“எங்க நிற்கிறேன்னே தெரியல” - கேப்டன்ஷிப் ‘200’ல் உருகிய தோனி

webteam

200வது முறையாக ஒருநாள் போட்டியில் கேப்டனாக இன்று தோனி விளையாடுவதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஆசியக் கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்றன. 6 அணிகளில் 4 அணிகள் மட்டும் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றதால் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகள் வெளியேறிவிட்டன. தற்போது நடைபெற்று வரும் ‘சூப்பர் 4’ சுற்றில் ஆப்கான் அணி வெளியேறிவிட்டது. இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட்டது. பாகிஸ்தான்-பங்களாதேஷ் அணிகள் நாளை வாழ்வா? சாவா? பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்நிலையில் இந்தியா-ஆப்கான் இடையேயான ‘சூப்பர் 4’ போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தோற்றாலும் இந்தியா இறுதிச்சுற்றுக்கு செல்லும் என்பதால், இந்தியாவின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், பும்ரா, புவனேஷ்குமார், சாஹல் உள்ளிட்டோருக்கு ஓய்வில் உள்ளனர். அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா ஓய்வில் இருப்பதால், அவரது பொறுப்பு முன்னாள் கேப்டன் தோனியிடம் வந்துள்ளது. நீண்ட மாதங்களுக்கு பிறகு தோனி கேப்டனாக விளையாடுவதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஒருநாள் போட்டியில் தோனி கேப்டனாக விளையாடும் 200வது போட்டி இது. இந்தப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

டாஸ் போடப்பட்டதற்குப் பின்னர் பேசிய தோனி, “இன்றைய போட்டியில் நாங்கள் முதலில் பந்துவீசுகிறோம். இன்றைய போட்டியில் சில மாற்றங்கள் இருக்கின்றன. தொடக்க பந்துவீச்சாளர்கள் புவனேஷ் மற்றும் பும்ரா ஓய்வில் உள்ளனர். சஹாலும் ஓய்வில் உள்ளார். இந்தத் தொடரில் அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலர் இந்திய அணியின் 15 பேரில் ஒருவராக மட்டுமே இருந்துள்ளனர். அவர்களை இந்தப் போட்டியின் விளையாட வைப்பது சிறப்பு. அவர்கள் திறமையை வெளிப்படுத்த இது ஒரு அரிய வாய்ப்பு. இதுவரை நான் 199 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளேன். இந்தப் போட்டியின் மூலம் 200வது முறையாக கேப்டனாக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. கண்டிப்பாக நான் எங்கே நிற்கிறேன் என எனக்கே தெரியவில்லை. இதெல்லாம் விதிதான் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது, என் கையில் எதுவுமில்லை. நான் இன்று 200வது முறையாக கேப்டனாக விளையாடுகிறேன். ஆனால் இது ஒரு விஷயமே இல்லை” என்று உருக்கமாக கூறினார்.