விளையாட்டு

ஆசியக் கோப்பை யாருக்கு..? இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு!

ஆசியக் கோப்பை யாருக்கு..? இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு!

ச. முத்துகிருஷ்ணன்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

15ஆவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ஹாங்காங், வங்கதேசம் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர்-4 (SUPER-4) சுற்றுடன் நடையைக் கட்டின. சூப்பர்-4 சுற்றில் 3
போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணியும், இரண்டில் வெற்றிகண்ட பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

முன்னாள் சாம்பியன்களான இவ்விரு அணிகளும், கோப்பை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் துபாயில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தி வருகிறது. முந்தைய போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில்
பாகிஸ்தான் அணி ஆயத்தமாகி வருகிறது.

இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறுவதால், இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கேப்டன்), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், ஷதாப் கான், ஆசிப் அலி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.

இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(விக்கெட் கீப்பர்), தனுஷ்க குணதிலக்க, தனஞ்சய டி சில்வா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க.