விளையாட்டு

இதுதான் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் 11?.. அப்போ அஸ்வினுக்கு வாய்ப்பில்லையா?

இதுதான் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் பிளேயிங் 11?.. அப்போ அஸ்வினுக்கு வாய்ப்பில்லையா?

சங்கீதா

ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பெறவுள்ள வீரர்கள் குறித்து பிசிசிஐ மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும், அதில் அஷ்வின் இடம்பெறவில்லை என்றும் நெட்டிசன்கள் பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீகரகத்தில் இன்று முதல் வருகிற செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நாளை இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் இரண்டாவது போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. உலகக் கோப்பையை வெல்வதைக் காட்டிலும், இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றாலே மைதானத்தில் மிகப்பெரிய பரபரப்பு நிலவும்.

அதுவும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை இதே மைதானத்தில் தான் தோற்கடித்தது. உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் வென்றது அதுவே முதல் முறை. இதனைத் தொடர்ந்து நாளை ரோகித் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை வென்று தக்க பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இரு நாட்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள் 11 பேரின் புகைப்படங்களை மட்டும் பிசிசிஐ பகிர்ந்துள்ளது. அந்த புகைப்படத்தில் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல், கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், ஆவஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த வலைப்பயிற்சியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவி பிஷ்னோய், தீபக் ஹூடோ ஆகியோர் இடம்பெறவில்லை. இதனால் இவர்களுக்கு ஆடும் லெவனில் இடம் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் மீண்டும் கடந்த வருடம் போல் இந்தியாவை தோற்கடிக்க போகின்றனர் என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் அப்போதைய கேப்டனாக இருந்த தோனி தலைமையிலான இந்திய அணியில் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை சுழல்பந்து வீச்சாளராக அஷ்வின் அசத்தி வந்தார். இருப்பினும் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விடைபெற்றப் பின்னர், கடந்த 2017-ம் ஆண்டுக்குப்பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி – தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூட்டணியில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஒருசில போட்டிகளில் சுமாராக செயல்பட்டார் என்பதற்காக அஷ்வின் புறக்கணிக்கப்பட்டார். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மொத்தமாக கழற்றிவிடப்பட்டார் அஷ்வின்.

தற்போது ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் அஷ்வின் இடம் பிடித்தார். இதனை பலரும் பாராட்டினர். கேரியரின் உச்சத்தில் இருக்கும்போது அஷ்வினின் வாழ்க்கையை முந்தைய கூட்டணி வீணடித்து விட்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டக்கும் கூறியிருந்தார். எனினும் புதிதாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் ட்ராவிட் கூட்டணி அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு கொடுப்பது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் பிசிசிஐ-யின் இந்தப் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்திய அணியில் இடம் கிடைத்தாலும், ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.