விளையாட்டு

ஆசியக் கோப்பை: காயம் காரணமாக ஜடேஜா விலகல்! மாற்று வீரர் யார்?

ஆசியக் கோப்பை: காயம் காரணமாக ஜடேஜா விலகல்! மாற்று வீரர் யார்?

ச. முத்துகிருஷ்ணன்

ஆசிய கோப்பை 2022 தொடரில் காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தொடரிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், மாற்று வீரராக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசியக் கோப்பைத் தொடரில் குரூப் சுற்றுப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்திய அணி பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளை அடுத்தடுத்து சாய்த்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஆப்கானிஸ்தான் அணியும் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளை சாய்த்து முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு அடியெடுத்து வைத்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜடேஜா இனி நடைபெற உள்ள போட்டிகள் உட்பட ஆசிய கோப்பை தொடரிலிருந்தே விலகுவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேலை களமிறக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. ரவீந்திர ஜடேஜா வலது முழங்காலில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார். அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். காத்திருப்பு வீரர் பட்டியலில் இடம்பெற்றிருந்த அக்சர் படேல் அவருக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்குவார்.” என தெரிவித்துள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய இரு போட்டிகளிலும் ஜடேஜா களமிறங்கினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் குவித்த அவர் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை. ஹாங்காங் அணிக்கு எதிராக ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் அவர் வீழ்த்திய நிலையில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றம் செய்யப்பட்டபின் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல். , ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.