விளையாட்டு

மீண்டும் வில்லனாக மாறிய மெஹிதி ஹாசன்... அஸ்வின், ஸ்ரேயாஸால் தப்பிப்பிழைத்த இந்தியா!

மீண்டும் வில்லனாக மாறிய மெஹிதி ஹாசன்... அஸ்வின், ஸ்ரேயாஸால் தப்பிப்பிழைத்த இந்தியா!

Rishan Vengai

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்றது இந்திய அணி.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற நிலையில் வங்கதேசத்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் டிசம்பர் 22 அன்று தொடங்கப்பட்ட 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்கள் சேர்க்க, இந்திய அணி 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் சேர்த்தது. 87 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி ஷகிர் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் உதவியால் 231 ரன்கள் சேர்த்தது.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு, மூன்றாவது நாள் முடிவில் ஆட்டம் காமித்தனர், வங்கதேச அணி பந்துவீச்சாளர்கள். அபாரமாக பந்துவீசிய மெஹிதி ஹாசன் இந்திய அணியின் ஓபனர்களின் மேல் அழுத்தத்தை அதிகமாக்கினார். பேட்டுகளில் பட்டு எஜ்ஜானபோதிலும் கேஎல் ராகுல் முதலில் தப்பினார். பின்னர் 3ஆவது ஓவர் வீச வந்த ஷாகிப் அல் ஹசன் கேஎல் ராகுலை 2 ரன்களுக்கு வெளியேற்றினார். முதல் விக்கெட்டை இழந்த பிறகு இந்திய அணியை தன்னுடைய சிறப்பான பந்துவீச்சால் மிரட்டிய மெஹிதி ஹாசன், சட்டீஸ்வர் புஜாரா, சுப்மன் கில், விராட் கோலி என அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 37 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, மெயின் பேட்டர்களை அடுத்து களமிறக்காமல் அக்சர் பட்டேல் மற்றும் உனாத்கட்டை களமிறக்கியது.

மெயின் பேட்டர்கள் சொதப்பினாலும் சிறப்பான டிபன்ஸ் ஆட்டமுறையை வெளிக்காட்டிய அக்சர் பட்டேல் 54 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகளுடன் 26 ரன்னிலும், உனாத்கட் 3 ரன்களிலும் களத்தில் இருந்தனர். 3ஆவது நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை பெற்றிருந்தது இந்திய அணி.

இந்தியாவிற்கு மீண்டும் தொல்லையாக மாறிய மெஹிதி ஹாசன்!

4ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி ஆட்டத்தை பெரிதும் விக்கெட்டுகளை இழக்காமல் இறுதிவரை எடுத்துசெல்லும் என்று எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், 56 ரன்களில் உனாத்கட்டை வெளியேற்றி 5ஆவது விக்கெட்டை கைப்பற்றினார் ஷாகிப் அல் ஹசன். பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் போட்டியை எளிதாகவே இந்திய அணிக்கு எடுத்து செல்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், மீண்டும் இந்திய அணிக்கு வில்லனாக மாறினார் மெஹிதி ஹாசன்.

71 ரன்கள் இருந்த போது ரிஷப் பண்டை லெக்பை விக்கெட்டில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் மெஹிதி ஹாசன். பின்னர் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அக்சர் பட்டேலை போல்டாக்கு வெளியேற்றி மிரட்டினார் மெஹ்தி. 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி யாருக்கு என்ற கேள்வியே எழ ஆரம்பித்துவிட்டது.

அணியை காப்பாற்றிய அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்!

8ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த அஸ்வின் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

போட்டியை விரைவாகவே முடிக்க நினைத்த அஸ்வின் இறுதி கட்டத்தில் பவுண்டரிகள் சிக்சர் என பறக்க விட 7 விக்கெட்டுக்கு 145 ரன்களை எட்டிய இந்திய அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

சிறப்பாக பந்துவீசிய மெஹிதி ஹாசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.