நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்துள்ளது.
மொஹாலி நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 95 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட் சாய்த்தார். ரிச்சர்ட்சன் 3 விக்கெட் எடுத்தார்.
இதனையடுத்து, 359 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் எடுப்பதற்கு பின்ச், மார்ஷ் விக்கெட்களை பறிகொடுத்தது. இருப்பினும், கவாஜா, ஹண்ட்ஸ்கோம்ப் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதோடு, சீரான வேகத்தில் ரன்களை அடித்தனர். இந்த ஜோடியை ஆட்டமிழக்க செய்த இந்திய பந்துவீச்சாளர்களின் முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை. அதனால், இந்திய அணி வெற்றி வாய்ப்பு ஆஸ்திரேலியா பக்கம் சாய்ந்தது.
சிறப்பாக விளையாடிய காவஜா 91 ரன்னில் ஆட்டமிழந்தார். காவஜா-ஹண்ட்ஸ்கோம்ப் ஜோடி 192 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஹண்ட்ஸ்கோம்ப் 105 பந்துகளில் 117 ரன்கள் அடித்து அவுட் ஆனார். ஹண்ட்ஸ்கோம்ப் ஆட்டமிழக்கும் போது ஆஸ்திரேலிய அணி 41.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. 53 பந்துகளில் 88 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
அதனால், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது. ஏனெனில் டெத் ஓவரில் பும்ரா, புவனேஸ்குமார் இருந்தனர். ஆனால், டர்னர் இந்திய அணியின் கனவை சிதறடித்துவிட்டார். சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசி அதிரடி காட்டினர். இறுதிவரை அவரது அதிரடிய இந்திய வீரர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
அதனால், ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. டர்னர் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி உட்பட 84 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற, அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.