விளையாட்டு

முகமது ஷமிக்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் உத்தரவு

முகமது ஷமிக்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் உத்தரவு

webteam

முகமது ஷமியின் மனைவி தொடர்ந்த வழக்கில் ஷமிக்கு மேற்கு வங்கத்தில் உள்ள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த ஆண்டு முன்வைத்தார். அத்துடன் கொல்கத்தா காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்திருந்தார். அதன்பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதுதொடர்பான வழக்கு அலிபூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமதுவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும்15 நாட்களுக்குள் ஷமி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது ஷமி, தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். இந்த டெஸ்ட் தொடர் நாளையுடன் முடிவடைவதால், அதன்பின்னர் ஷமி இந்தியா புறப்பட்டு வரலாம். அவரை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.