2011ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் இலங்கை தோற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரணதுங்கா, இந்தியா-இலங்கை அணிகள் மோதிய 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போது வர்ணனையாளர்கள் குழுவில் தாம் இடம்பெற்றிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்றது, தமக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்ததாகவும், அந்த போட்டியில் மேட்ச் பிக்ஸிங் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு சந்தேகம் தமக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, 2011ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வீரர்கள் தங்களிடமுள்ள அசுத்தங்களை, கிரிக்கெட் ஜெர்சிக்குள் மறைத்து விட முடியாது என்று கூறியுள்ள ரணதுங்கா, எந்தவொரு வீரரின் பெயரையும் குறிப்பிடவில்லை. தற்போதைய சூழலில் இதுதொடர்பாக எந்தவொரு தகவலையும் தம்மால் வெளியிட முடியாது என்று கூறியுள்ள அவர் நிச்சயமாக ஒருநாள் அனைத்து தகவல்களையும் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.
2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சேசிங்கில் இந்திய அணி களமிறங்கியபோது முன்னணி வீரர்களான சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை 31 ரன்களுக்குள் இழந்தது. அப்போது இலங்கை அணி வெல்லும் சூழலில் இருந்ததாகவும், ஆனால், மோசமான பீல்டிங்காலேயே இலங்கை அணி போட்டியில் தோற்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரணதுங்கா வாயிலாக தற்போது முதல்முறையாக எழுந்துள்ளது. அந்த போட்டியில் தோனி மற்றும் கவுதம் காம்பீர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 48.2 ஓவர்களில் இந்திய அணி எட்டியது. இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய கவலை அளிக்கும் நிலை தொடர்பாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு ரணதுங்கா சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தமிரா மஞ்சு தெரிவித்துள்ளார். இலங்கை அணி, சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரில் 2-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.