தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்படும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவிக்கிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான அர்ஜூனா விருது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன், கிரிக்கெட் வீரர் புஜாரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், கோல்ப் வீரர் சிவ் சவ்ராஸ்யா உள்ளிட்ட 17 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா ஆகியோர் கூட்டாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன், பிரேசிலில் கடந்த ஆண்டு நடந்த பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். அவரின் சாதனையை போற்றும் வகையில் மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அந்த வரிசையில் தற்போது அர்ஜூனா விருதுக்கும், மாரியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.