விளையாட்டு

ஊரடங்கில் ரஜினி படங்களை அதிகம் பார்க்கிறேன் - மனம்திறந்த சஞ்சு சாம்சன்

webteam

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள மனநிலை ஐபிஎல் போட்டியால் மாறலாம் என கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தின் அனுபவங்களை சஞ்சு சாம்சன் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் பல்வேறு கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் கூறும்போது, “ஊரடங்கு காலத்திற்கு முன்பே எனக்கு பயிற்சி மேற்கொள்ள சில உபகரணங்கள் கிடைத்துவிட்டன. ஜிம் சைக்கிள், உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளன. அவற்றைக்கொண்டு தினமும் என் வீட்டின் மாடியில், பயிற்சியாளர் கூறும் அறிவுரைப்படி பயிற்சி மேற்கொள்கிறேன். அத்துடன் எனது சகோதரரின் வீட்டு மாடியில் வலைக்கட்டி அதில் டென்னிஸ் பந்து மூலம் கிரிக்கெட் பயிற்சி செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், “7-8 வருடங்களாக தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். தற்போது விளையாடாமல் வீட்டில் முடங்கியிருப்பது முற்றிலும் வேறுமாதிரி உள்ளது. பல நேரங்களில் சும்மா தான் இருக்கிறேன். ரஜினி படங்கள் மற்றும் எனக்குப் பிடித்த மலையாள படங்களை பார்க்கிறேன். நான் செய்திகளை பெரிதும் பார்க்கமாட்டேன். ஆனாலும் கொரோனாவால் தற்போது பார்க்கிறேன். கொரோனா குறித்த செய்திகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. கேரளா கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் கொரோனாவிற்கு எதிராக ஒற்றுமையுடன் போராடி வருகின்றனர். அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி கொரோனாவில் மீண்டுள்ளனர்” என கூறியுள்ளார்.

மேலும், “இந்த காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் தவிப்பதை நாம் செய்தியாக பார்க்கிறோம். ஆனால் அந்த வாழ்க்கை மிகவும் கடினமானது. அதை நினைக்கையில் நான் உணர்ச்சிவசப்படுகிறேன். நாம் சிறிய கஷ்டங்களுக்கே பல குறைகளை கூறுகிறோம். ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களை பார்த்தால், நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு மேம்பட்டது என புரியும். என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்துள்ளேன். இதுதவிர எனது சக கிரிக்கெட் வீரர்களுடன் இந்த காலகட்டத்தில் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் அனைவரும் எதையாது கற்றுக்கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.

இதுமட்டுமின்றி, “ஒரு கிரிக்கெட் வீரராக எனது கருத்து விளையாட்டு போட்டிகளை விரைவில் தொடங்க வேண்டும். ஏனென்றால் தனிப்பட்ட வகையில் நான் விளையாடுகிறேன், அத்துடன் அதை மிகவும் விரும்புகிறேன். நான் வெளியே செல்ல வேண்டும், விளையாட வேண்டும். அதேசமயம் நமக்கு பொறுப்புகளும் இருக்கின்றன. அரசாங்கம் கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஐபிஎல் போட்டி நாட்டின் தற்போதைய மனநிலையை மாற்றும் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விக்கெட் கீப்பராக உள்ளார். இதுவரை 93 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2209 ரன்கள் எடுத்துள்ளார். 2 சதம் மற்றும் 10 அரை சதங்கள் அடித்துள்ளார்.