விளையாட்டு

“தோனியின் காலகட்டத்தில் பிறந்ததால் வருத்தப்படவில்லை” பார்த்திவ் படேல் !

“தோனியின் காலகட்டத்தில் பிறந்ததால் வருத்தப்படவில்லை” பார்த்திவ் படேல் !

jagadeesh

தோனியின் காலகட்டத்தில் பிறந்ததால் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் சிறுவயதிலேயே டெஸ்ட் அணியில் விளையாடியவர். தோனியின் வருகைக்குப் பின்பு இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு பார்த்திவுக்கு அரிதாகவே கிடைத்தது. இப்போது அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லையென்றாலும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இப்போது ஆகாஷ் சோப்ராவுடன் நேரலையில் பேசிய பார்த்திவ் படேல் பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார், அதில் "தோனியின் காலக்கட்டத்தில் நான் பிறந்துவிட்டதாக பலரும் என் மீது பரிதாபப்படுகிறார்கள். ஆனால் நான் அது குறித்து எப்போதும் வருத்தப்பட்டதில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை தோனியால் குறைந்துவிட்டது என்று சொல்வதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் தோனிக்கு முன்பே இந்திய அணிக்குள் நுழைந்துவிட்டேன். ஆனால் நானும் சரி தினேஷ் கார்த்திக்கும் சரி, இருவருடைய ஆட்டத்திறனும் சிறப்பாக இல்லாததால் மற்றவர்களுக்கு வாய்ப்பு போனது என்பதுதான் உண்மை. இதற்கு அனுதாபப்பட வேண்டிய அவசியமில்லை" என்றார்.

மேலும், தொடர்ந்த பார்த்தில் படேல் " நான் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது மிகவும் பயந்தேன். என்னால் டென்னிஸ் பந்தைக் கூட சரியாக பிடிக்க முடியாது என எண்ணினேன். அது மாதிரியான எண்ணத்தை பத்திரிக்கைகாரர்கள் என்னை குறித்து எழுதினார்கள். அதனால் அதுபோன்ற பயமும் எண்ணமும் எனக்கு வந்தது. என் மீது எனக்கு நம்பிக்கை வருவதற்காகவே மீண்டும் அன்டர் 16 வீரர்களுடன் விளையாட தொடங்கினேன். 2004 இல் அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு புதிதாக மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன். பின்பு எந்த அணிக்காக விளையாடினாலும் நம்முடைய சிறந்த ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதன்படியே இப்போதும் இருக்கிறேன்" என கூறியுள்ளார்.