2021 க்கான ஐபிஎல் தொடரை மார்ச் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தோனியை எதிர்வரும் ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ளாமல் கழட்டி விட வேண்டும் என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா.
“2021 ஐபிஎல் தொடருக்காக நடக்க உள்ள மெகா ஏலத்தில் சென்னை அணி தோனியை தக்க வைத்துக் கொள்ள கூடாது. அப்படி செய்தால் தோனி அதற்கு அடுத்த மூன்று சீசன்களும் தொடர்ந்து விளையாடுவாரா என்பது சந்தேகம். 2021 சீசனில் அவர் விளையாடுவது உறுதி என்றாலும் அதற்கடுத்த சீசன்கள் சந்தேகம் தான். அதனால் சென்னை பதினைந்து கோடிகளை இழக்க நேரிடும். அதில் கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும்” என ஃபேஸ்புக் வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் தோனி எதிர்பார்த்த அளவிற்கு ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. 14 லீக் போட்டிகளில் வெறும் 20 ரன்களே அடித்து இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் தோனி சேர்த்த குறைவான ரன்கள் இதுவே. சென்னை அணியும் மோசமான தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 7வது இடத்தையே பிடித்தது.
அதனால், அடுத்ததாக தோனி விளையாடுவாரா? அல்லது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி போட்டி நடக்கும் போதே எழுந்தது. இருப்பினும், தோனி 2021 ஐபிஎல் தொடரில் உறுதியாக விளையாடுவார் என சென்னை அணி நிர்வாகம், தோனியும் தெளிவாக சொல்லியது. அதனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் சென்னை அணி சார்பாக அவர் விளையாடுவது நிச்சயமே.