விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கத்தை குறிவைக்கும் தமிழ் மங்கை இளவேனில்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கத்தை குறிவைக்கும் தமிழ் மங்கை இளவேனில்

jagadeesh

ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் இலக்கை குறிவைக்க இருக்கிறார். அவரது பார்வை தங்கப்பதக்கத்தை நோக்கி இருக்குமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் நம்பர் ஒன் வீரர் இளவேனில் வாலறிவன். இந்த தமிழ் மகளின் அழகிய பெயர் டோக்கியோ ஒலிம்பிக் பதக்க மேடையில் ஒலிக்க வாய்ப்பு இருக்கிறது. 21 வயதான இளவேனில் வாலறிவன் கடலூரில் பிறந்து அகமதாபாத்தில் வளர்ந்தவர். இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்ற இளவேனிலுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் துப்பாக்கிச் சுடுதலில் அப்படியொரு ஈர்ப்பு. இவரது திறமையை அறிந்த ஒலிம்பிக் பதக்க நாயகன் ககன் நரங் தனது பயிற்சி பட்டறையில் இளவேனிலை இணைத்துக்கொண்டார்.

நரங்கின் பயிற்சிப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட அவரது திறமை 2018ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் மின்னியது. ஜுனியர் உலகக்கோப்பை போட்டியில் தங்கம் வென்று தனது சர்வதேச வெற்றிபயணத்தை தொடக்கினார் இளவேனில். இதைத் தொடர்ந்து சீனியர் பிரிவிலும் சாதிக்கத் தொடங்கினார். 2019ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தமக்கு பிடித்தமான 10 மீட்டர் ஏர்ரைஃபிள் பிரிவிலேயே அவர் கலந்துகொண்டார். யாரும் எதிர்பார்க்கா வண்ணம் தங்க பதக்கத்தை அவர் வெல்ல தேசமே அவரை கொண்டாடியது.

இதைத்தொடர்ந்து அதே ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலக்கோப்பையிலும் 10 மீட்டர் ஏர்ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். உலகளவிலான போட்டிகளில் சீரான திறன் வெளிப்பாட்டை அவர்காட்டி வரும் நிலையில் தான் ஒலிம்பிக் களத்திற்கும் செல்கிறார். இதற்கெல்லாம் மேலாக சர்வதேச தர நிலையிலும் தற்போது அவர் முதலிடத்தில் இருக்கிறார். ஒரே ஆண்டில் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் தங்கம் வென்ற தங்கமங்கை இளவேனிலின் துப்பாக்கி ஒலிம்பிக் களத்தில் தங்கப்பதக்கத்தை நோக்கி குண்டுகளை பாய்ச்சும் என நம்பலாம்.