இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டி20 ஆட்டமும் சமனில் முடிந்ததால். மூன்றாவது டி20 போட்டி போல, இந்த ஆட்டமும் வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவருக்கு சென்றுள்ளது.
4-வது போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டிம் சவுத்தி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவெடுத்தார். இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷமி, ஜடேஜாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஓரளவுக்கு நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுலும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். சரிவிலிருந்த அணியை ஓரளவுக்கு காப்பாற்றியது மணீஷ் பாண்டேவின் பொறுப்பான ஆட்டம்தான். இதில் புயலாய் வந்த ஷர்துல் தாக்கூர், 20 ரன்கள் எடுத்து ரன் ரேட்டை உயர்த்தினார். இதன் பின்பு வந்து மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லோரும் விரைவாகவே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய மணீஷ் பாண்டே மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அரை சதம் அடித்தார். இவர் 36 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்தார். கடைசியாக 20 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்தின் இஷ் சோதி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதற்குடுத்து களமிறங்கிய நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரரான மார்டின் குப்தில் 4 ரன்னில் அவுட்டானார். ஆனால், மற்றொரு தொடக்க வீரரான மன்ரோ அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 64 எடுத்தார். அடுத்து விக்கெட் கீப்பரான செஃப்ரட் 57 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து ஒரு கட்டத்தில் வெற்றிப் பெறும் சூழலில் இருந்தது. ஆனால், கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 8 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் 3 விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து. கடைசி பந்தில் 2 ரன் எடுக்க வேண்டிய சூழலில் ஒரு ரன் எடுத்து இரண்டாவது ரன் எடுக்கும்போது சான்ட்னர் ரன் அவுட்டானதால், போட்டி சமனில் முடிந்தது.
மூன்றாவது டி20 போட்டியைப் போலவே வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவருக்கு சென்றுள்ளது 4ஆவது டி20 போட்டி.