விளையாட்டு

"30 வயதானால் முதியவர் போல் பார்க்கிறார்கள்"..அதிருப்தியுடன் ஓய்வை அறிவித்தாரா முரளி விஜய்?

"30 வயதானால் முதியவர் போல் பார்க்கிறார்கள்"..அதிருப்தியுடன் ஓய்வை அறிவித்தாரா முரளி விஜய்?

Rishan Vengai

இந்தியாவிற்காக தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்த தமிழகத்தைச்சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய், கடைசி நேரத்தில் ஒரு கம்பேக் கொடுத்து இந்திய அணியிலிருந்து முறையாக ஓய்வுபெறாமல், பிசிசிஐ மீதான அதிருப்தியோடு தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய், 2008ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர், தனது முதல் போட்டியில் அதிக ரன்களை குவிக்க தவறினாலும், அவருடைய ஆட்ட அணுகுமுறை மற்றும் நுட்பத்திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது. பின்னர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திகொண்ட முரளிவிஜய், இந்தியாவின் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேனாக டெஸ்ட் வடிவத்தில் மிளிர தொடங்கினார்.

தன்னுடைய சிறப்பான பேட்டிங்கால் இந்திய டெஸ்ட் அணியில் நிலையான இடத்தை பிடித்த அவரிடம், கம்பீரின் நிலைத்து நிற்கும் அணுகுமுறையும், சேவாக்கின் அதிரடியான ஆட்டத்திறனும் இருப்பதாக அப்போது அனைவராலும் கூறப்பட்டது. தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்த போதிலும், இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்திருந்த போதிலும், சில மோசமான போட்டிகளுக்கு பிறகு அவர் முற்றிலுமாக அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அணியில் இளம் வீரர் ப்ரித்வி ஷாவிற்கு ஓபனிங் வீரராக வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க எனது தொடர் பயிற்சிமுறைகளை நம்பினேன்!

தொடர்ந்து அணியின் கம்பேக்கிற்காக காத்திருந்த முரளி விஜய் மீண்டும் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணியில் எடுக்கப்பட்டார். பயிற்சி ஆட்டத்தில் அவர் அற்புதமான சதத்தை பதிவு செய்திருந்தாலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் எதிர்பார்த்த ரன்களை அடிக்க தவறியதால் மீண்டும் அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். அதற்கு பிறகு என்னதான் ரஞ்சிக்கோப்பை முதலிய உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் பிசிசிஐ அவரை கண்டுகொள்ளவே இல்லை.

30 வயதானால் முதியவர் போல் பார்க்கிறார்கள்-வேதனையோடு கூறிய விஜய்

2018ம் ஆண்டிற்கு பிறகு 5 வருடங்களாக அணியில் எடுக்கப்படாதது குறித்து சமீபத்தில் பேசியிருந்த முரளி விஜய், தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்த அவர், ” இந்திய அணியில் ஒரு வீரர் 30 வயதை கடந்துவிட்டால், ஏதோ 80 வயதான முதியவர் போல் பார்க்கின்றனர். ஊடகத்தின் பார்வையும் அப்படி தான் இருக்கிறது. நான் இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளேன், ஆனால் சமீப காலங்களாக பிசிசிஐ-ன் தொடர்பில் கூட இல்லாமல் இருக்கிறேன். மீண்டும் எனக்கான வாய்ப்புகளே இங்கு தரப்படவில்லை. சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வாய்ப்பு தேடி அலைய வேண்டிய துரதிர்ஷ்ட நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன்'' என முரளி விஜய் வேதனை தெரிவித்திருந்தார்.

புதிய வாய்ப்புகளை தேடிப்போகிறேன் - ஓய்வை அறிவித்த முரளி விஜய்

38 வயதான முரளி விஜய் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக, ஒரு உருக்கமான பதிவுடன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தனது ஓய்வை அறிவித்தார். அவருடைய ஓய்விற்கான அந்த பதிவில், “ எனக்கு இதுவரை அளிக்கப்பட்ட வாய்ப்புகளுக்காக பிசிசிஐக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். உலக கிரிக்கெட்டில் ஒரு வீரராக மட்டுமில்லாமல் தொழில்முறைகளிலும் எனக்கான புதிய வாய்ப்புகளை தேடிச்செல்லவிருக்கிறேன். ஒரு கிரிக்கெட்டராக இந்த ஓய்வு அறிவிப்பை, எனக்கான அடுத்த படியாகவே பார்க்கிறேன். எனக்கான புதிய அத்தியாயத்தை தொடங்குவதை ஆவலாக எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

பிசிசிஐ-ன் நிராகரிப்பால் வேதனையோடு ஓய்வை அறிவிக்கும் முதல் வீரராக முரளி விஜய் இல்லாமல் போனாலும், இந்திய அணியில் முரளி விஜயின் பங்களிப்பானது டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் தனித்துவமான ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் முரளி விஜயின் சில தனித்துவமான சாதனைகள்,

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை பதிவு செய்த முரளி விஜய்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால், சச்சின், விவிஎஸ் லக்சுமன் மற்றும் விராட் கோலி வரிசையில் நிச்சயம் முரளி விஜயின் பெயரும் இருக்கும். ஏனென்றால் அவர் தன்னுடைய 12 டெஸ்ட் சதங்களில் 4 சதங்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தான் எடுத்து வந்திருக்கிறார். மேலும் மற்றொரு சதமடிக்கும் வாய்ப்பை 1 ரன்னில் தவறவிட்டு, 2014-2015 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 99 ரன்களில் ஆட்டமிழந்தார் முரளி விஜய்.

சீம் & ஸ்விங் ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்ட விஜய்!

செனா நாடுகள் எனப்படும் சீம் மற்றும் ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் போன நாடுகளான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பேட்ஸ்மேன்களில் முரளி விஜய்க்கான இடம் எப்போதும் தனித்துவமான ஒன்றாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

2014ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் ஸ்விங் மற்றும் சீமிற்கு பெயர் போன நாட்டிங்காமில் 146 ரன்களை விளாசி, அவர் தன்னுடைய சிறப்பான டெஸ்ட் இன்னிங்ஸை எடுத்து வந்திருந்தார். 2013ல் தென்னாப்பிரிக்காவின் அதிவேகமாக எழும்பும் பவுன்சர் டிராக்கில், டர்பன் ஆடுகளத்தில் 97 ரன்களை அடித்து அசத்தினார். 2015ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில், 80 ரன்களை குவித்த விஜய், தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை டிராவிற்கு எடுத்துச்செல்வார். மேலும் பெங்களூரு ஆடுகளத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 139 ரன்களை குவித்த அவர், டிரா என்ற இடத்திலிருந்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்து செல்வார்.

இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் சதங்களை அடித்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய்!

இந்தியாவிற்காக ஓபனிங் பேட்டராக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் முரளி விஜய், அதில் 12 சதங்களை விளாசி 3982 ரன்கள் குவித்துள்ளார்.

இந்தியாவின் ஓபனிங் பேட்டர்களில் அதிக டெஸ்ட் சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் கவாஸ்கர் 33 சதங்கள், சேவாக் 22 சதங்கள் என்ற வரிசையில் 12 சதங்களுடன் 3ஆவது இடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் 9 சதங்களுடன் கவுதம் காம்பீர் இருக்கிறார்.

இந்தியாவிற்காக 280+ பார்ட்னர்ஷிப்பில் அதிகமுறை இருந்த வீரர் முரளி விஜய்!

280 ரன்களுக்கு மேலான டெஸ்ட் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணிக்காக அதிகமுறை அடித்தவர்களில் பட்டியலில், 5 முறை அந்த இமாலய ரன்களை செய்துகாட்டியுள்ளார் முரளி விஜய். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் 4 முறை சச்சின் மற்றும் டிராவிட், 3 முறை விவிஎஸ் லக்ஸ்மன் இருக்கிறார்கள்.

இரண்டாவது விக்கெட்டுக்கு காலத்திற்குமான இந்திய சிறந்த பார்ட்னர்கள்!

2ஆவது விக்கெட்டுக்கு எப்போதைக்குமான சிறப்பான ஜோடியாக இந்திய முரளி விஜய் மற்றும் புஜாரா இருவரும் இருக்கின்றனர். 63 ரன்கள் சராசரியுடன் இந்த ஜோடி 9 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து 2615 ரன்களை குவித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் 2610 ரன்களுடன் டிராவிட் மற்றும் சேவாக், 2372 ரன்களுடன் டிராவிட் மற்றும் கம்பீர் இணைகள் இருக்கின்றன.

ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த ஒரே இந்திய வீரர்!

ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த ஒரே இந்திய வீரராக, 11 சிக்சர்களை விளாசி முரளி விஜய் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் 10 சிக்சர்களுடன் சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கின்றனர்.