விளையாட்டு

சைனா மேனை சமாளிக்க இங்கிலாந்து கையில் எடுத்த புது ஆயுதம் - பலன் கொடுக்குமா?

சைனா மேனை சமாளிக்க இங்கிலாந்து கையில் எடுத்த புது ஆயுதம் - பலன் கொடுக்குமா?

rajakannan

முதலாவது டி20 போட்டியில் 5 முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை ஆட்டம் காண செய்துவிட்டார் குல்தீப் யாதவ். தனது அபாரமான சுழல் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். குல்தீப் விக்கெட் எடுக்கும் வரை ஆட்டம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் வசமே இருந்தது. 

அந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர், புவனேஷ் குமார், உமேஷ் யாதவ் பந்து வீச்சுகளை சிதறடித்தனர். இருவரது அதிரடியாக விளையாடி 6 ஓவர்களில் 50 ரன்கள் குவித்தனர். ஜேசன் ராய் 30 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீசில் க்ளீன் போல்டாகி அவுட்டான போதும், பட்லர் தடாலடியாக ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. 

இங்கிருந்து தான் குல்தீப் யாதவின் மாயாஜாலம் வேலை செய்ய ஆரம்பித்தது. அடுத்த 9 ஓவர்களில் இங்கிலாந்து அணி சராசரியாக விளையாடி இருந்தாலும் 180-200 ரன்கள் எட்டும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், வெறும் 64 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால், 7 விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தது. குல்தீப் தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 14வது ஓவரில் மோர்கன், பேர்ஸ்டவ், ரூட் ஆகிய முக்கிய வீரர்களை வீழ்த்தினார். இந்த ஓவரில் குல்தீப்பின் பந்துவீச்சை பார்த்து இங்கிலாந்து வீரர்கள் வியந்து போனார்கள். ஆட்டம் இங்கிலாந்து கைகளில் இருந்து இந்திய அணி பக்கம் வந்தது. பின்னர், இங்கிலாந்து அடித்த 159 என்ற இலக்கை இந்திய அணி கே.எல்.ராகுலின் சதத்தால் எளிதில் அடித்தது. 

2வது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், சைனா மேன் குல்தீப் யாதவை எப்படி சமாளிப்பது என்று இங்கிலாந்து வீரர்கள் பயங்கரமாக யோசித்து ஒரு முடிவை எடுத்துள்ளார். வழக்கமாக கிரிக்கெட்டை பொறுத்தவரை புதித்தாக வரும் பந்துவீச்சாளர்கள் சமாளிப்பது சிரமம் என்பதால் மெர்லின் மிஷினை பயன்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து கேப்டன் பட்லர் கூறுகையில், “இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது கடினமாக ஒன்றாக உள்ளது. அதற்காக மெர்லின் எனப்படும் பந்து வீசும் மெஷின் மூலம் பயிற்சி எடுக்க முடியும். பயிற்சி எடுக்க அது மிகவும் சிறந்த மிஷினாக பயன்படுகிறது. தற்போது தான் சில வீரர்கள் முதன் முறையாக குல்தீப் பந்து வீச்சை எதிர்கொள்கிறார்கள். அவர்களது பந்து வீசும் வீடியோக்களும், ஒன்று, இரண்டு போட்டிகளின் அனுபவமும் வீரர்களுக்கு தேவைப்படும். குல்தீப் சிறந்த வீரர். இருப்பினும், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றார். 

மெர்லின் மிஷினை பொறுத்தவரை திரையில் குல்தீப் பந்து வீசுவது போன்று இருக்கும். அவர் போடுவது போல் பந்து எதிரில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு வரும். இப்படி தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் போது, களத்தில் அது உதவியாக இருக்கும்.