விளையாட்டு

”6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான்” ஸ்மித் அதிரடியால் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த ஆஸி!

”6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான்” ஸ்மித் அதிரடியால் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த ஆஸி!

Rishan Vengai

முதல்முறையாக ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே டி20 தொடரை 2-0 என ஒயிட் வாஸ் செய்த இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டத்திலும் பதிலடி கொடுத்து 2-0 என தொடரை கைப்பற்றி உள்ளது ஆஸ்திரேலிய அணி.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்றிருந்த இங்கிலாந்து அணி, மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மழையால கைவிடப்பட்டதால் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி ஒயிட் வாஸ் செய்து அசத்தியிருந்தது.

இந்நிலையில், 2022 டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வருகின்றன இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள். முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஒருநாள் கேப்டன்சி பொறுப்பை ஏற்று, அவர் தலைமையில் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித், லபுசனே மற்றும் மிட்சல் மார்ஸ் உதவியால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ரன்கள் சேர்த்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவன் ஸ்மித் 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி 94 சேர்ந்திருந்த நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போது அடில் ரசீத் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பின்னர் இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஷாம்பாவின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 39 ஓவர் முடிவில் 208 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. முதல் போட்டியில் சதம் விளாசிய டேவிட் மலனை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார் ஸ்டார்க். ஜேசன் ராய், டேவிட் மலன், சாம்கரன் என மூன்று பேர் 0 ரன்களை பதிவு செய்தனர். ஸ்டார்க் மற்றும் ஷாம்பா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இறுதியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

முதல் போட்டியில் 80 ரன்கள், இரண்டாவது போட்டியில் 94 அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார் ஸ்டீவன் ஸ்மித். முதல் போட்டிக்கு பின்னர் பேசியிருந்த ஆஸ்திரேலியாவின் வீரர் ஸ்டீவன் ஸ்மித் 6 ஆண்டுகளுக்கு பிறகு எனது பழைய விளையாட்டை விளையாடியது போல் உணர்ந்தேன். சமீப காலங்களாக எனது டெக்னிக்கை மீண்டும் கொண்டுவருவதில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். அந்த பயிற்சி தற்போது தனக்கு பயனளித்திருப்பதாக கூறினார். பால் டெம்பரிங் விவகாரத்திற்கு பிறகு ஸ்டீவன் ஸ்மித் அதிக அழுத்தத்தில் தள்ளப்பட்டு, தனது பழைய போட்டியை வெளிக்கொண்டு வராமல் பார்ம் அவுட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னர் ஃபார்மிற்கு வந்திருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பலமாக மாறியுள்ளது.

கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் ஸ்டீவன் ஸ்மித் அடித்த ரன்கள் 61, 105, 80, 94 ரன்கள் ஆகும்.