விளையாட்டு

34 வருடங்களுக்கு பிறகு அப்பா செய்த அதே சாதனையை நிகழ்த்தி காட்டிய அர்ஜூன் டெண்டுல்கர்!

34 வருடங்களுக்கு பிறகு அப்பா செய்த அதே சாதனையை நிகழ்த்தி காட்டிய அர்ஜூன் டெண்டுல்கர்!

Rishan Vengai

ரஞ்சிக்கோப்பை தொடரில் பங்குபெற்று விளையாடும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 34 வருடங்களுக்கு முன் தந்தை செய்த அதே சாதனையை அவரும் செய்து அசத்தியுள்ளார்.

2022-2023ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக்கோப்பை தொடர் நேற்று டிசம்பர் 13ல் தொடங்கி 2023 பிப்ரவரி 20ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நேற்று தொடங்கப்பட்ட முதல் நாள் போட்டியில் பவுலிங், பேட்டிங் என இருதரப்பிலும் அசத்திவருகின்றனர் அனைத்து அணியின் வீரர்களும். மும்பை அணிக்காக இல்லாமல் கோவா அணிக்காக பங்குபெற்று விளையாடுகிறார் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர்.

நேற்று காலை 9.30 மணியளவில் தொடங்கப்பட்ட கோவா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது கோவா அணி. முதலில் பேட்டிங்க் செய்த கோவா அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தனர் ராஜஸ்தான் அணியினர். 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கோவா அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார் டாப் ஆர்டர் வீரரான சுயாஸ் பிரபுதேசாய். பின்னர் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 7ஆவது வீரராக களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர் பிரபுதேசாய் உடன் கைக்கோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஒருபுறம் பிரபுதேசாய் சதமடித்து அசத்த, மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜூன் டெண்டுல்கர் 7ஆவது இடத்தில் இறங்கி தனது முதல் ரஞ்சிக்கோப்பை போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். அர்ஜுன் டெண்டுல்கர் 120 ரன்களில் வெளியேற, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இரட்டை சதமடித்த பிரபுதேசாயும் 212 ரன்களுக்கு வெளியேறினார். இரண்டாவது நாள் முடிவில் பிரபுதேசாய் மற்றும் அர்ஜூன் டெண்டுல்கர் உதவியால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 493 ரன்களை குவித்துள்ளது கோவா அணி.

1988ல் சச்சின் டெண்டுல்கர் - 2022ல் அர்ஜூன் டெண்டுல்கர்

1988ஆம் ஆண்டு முதல் ரஞ்சிக்கோப்பை போட்டியை குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 4ஆவது வீரராக களமிறங்கி 100 ரன்களை விளாசி, அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் 34 வருடங்களிற்கு பிறகு தந்தை செய்த சாதனையை 7ஆவது வீரராக களமிறங்கி 120 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார் அர்ஜூன் டெண்டுல்கர்.