விளையாட்டு

உலகக் கோப்பையிலிருந்து விலகிய ‘ஆப்கான் தோனி’

உலகக் கோப்பையிலிருந்து விலகிய ‘ஆப்கான் தோனி’

webteam

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷாசாத் காயம் காரணமாக உலகக் கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி தற்போது வரை இரண்டு போட்டிகளில் விளையாடிவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரான முகமது ஷாசாத் காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இவர் கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி போட்டியின் போது காயம் அடைந்தார். எனினும் ஆப்கானிஸ்தானின் முதல் இரண்டு போட்டிகளிலும் அந்தக் காயத்திலிருந்து குணமாகாத நிலையில் முகமது ஷாசாத் விளையாடினார். தற்போது காயம் மேலும் வலுபெற்றுவிட்டதால் அவர் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். 

இதனையடுத்து உலகக் கோப்பை தொடரின் தொழில்நுட்ப பிரிவின் அனுமதி பெற்று ஆப்கானிஸ்தான் இவருக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்துள்ளது. அதன்படி முகமது ஷாசாத்திற்கு பதிலாக இக்ரம் அலி விளையாடவுள்ளார். இக்ரம் அலி ஆப்கானிஸ்தான் அணிக்காக இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் முகமது ஷாசாத். இவர் இதுவரை 55 இன்னிங்ஸில் விளையாடி 1,843 ரன்கள் அடித்துள்ளார்.