ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில் இப்போது அங்குள்ள மிகப் பெரிய கிரிக்கெட் மைதானங்களை தங்கள் வசப்படுத்தியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேற உள்ள நிலையில் அங்குள்ள அரசுப் படைகளுக்கும் தலிபான் பழமைவாத இயக்கத்தினருக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. அரசுப் படையினரை வீழ்த்தி ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மாகாண தலைநகரமான ஷெபர்கன் நகரை தலிபான்கள் தங்கள் பிடியில் கொண்டுவந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தன் கவலையை அண்மையில் ட்விட்டரில் வெளிப்படுத்தியிருந்தார். அதில் “அன்புக்குரிய உலகத் தலைவர்களே! எனது நாடு பெரும் சிக்கலில் இப்போது உள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் தினந்தோறும் தங்களது உயிரை பலி கொடுத்து வருகின்றனர். எங்களது உடமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். எங்களை குழப்பத்தில் விடாதீர்கள். ஆப்கன் நாட்டு மக்களை கொல்வதையும், நாட்டை அழிப்பதையும் நிறுத்துங்கள். நாங்கள் அமைதியை விரும்புகிறோம்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் முக்கியமான கிரிக்கெட் மைதானங்களை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் காந்தஹாக் சர்வதேச கிரிக்கெட் மைதானம், குண்டுஸ் கிரிக்கெட் மைதானம், கோஸ்ட் சிட்டி கிரிக்கெட் மைதானம் ஆகியவை தாலிபான்களின் முழு கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. மேலும் பல்க் கிரிக்கெட் மைதானத்தை கைப்பற்றுவதற்கான சண்டை இப்போது நடைபெற்று வருகிறது. காபூல் தேசிய கிரிக்கெட் மைதானத்தையும், காசி அமானுல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தையும் இப்போது அரசு பாதுகாத்து வருகிறது.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்கவிருக்கும் இந்நேரத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் முக்கிய கிரிக்கெட் மைதானங்கள் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டதால். அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பெரும் கவலையை தெரிவித்து வருகின்றனர்.