அஜய் ஜடேஜா எக்ஸ் தளம்
விளையாட்டு

”அஜய் ஜடேஜா எங்களுக்காக அழுதார்” - ஆப்கானிஸ்தான் வீரர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Prakash J

ஆப்கானிஸ்தான் அணியின் அஜய் ஜடேஜா மிக முக்கியமான வழிகாட்டியாக இருந்ததாக அந்த அணியின் ஹஷ்மத்துல்லா ஷாகிடி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், ”அஜய் ஜடேஜா மிகவும் பாசிட்டிவான மனிதர். என் வாழ்க்கையில் அவரைப் போன்ற ஒரு பாசிட்டிவான மனிதரைப் பார்த்ததே இல்லை. ஓய்வறையில் இருந்து எங்களுக்கு எப்போதும் ஊக்கம் அளித்துக்கொண்டே இருப்பார். குறிப்பாக அழுத்தமான சூழல்களில், அவர் பேசிய வார்த்தைகள் அவ்வளவு உதவியாக இருந்தன. இந்திய ஆடுகளங்கள், பிட்ச்கள் குறித்து சிறந்த அறிவு அவரிடம் இருக்கிறது.

உலகக்கோப்பை முடிவடைந்தபின், அவர் பிரிய மனமில்லாமல் எங்களுக்காகக் கண்ணீர் சிந்தினார். அந்த வீடியோகூட என்னிடம் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியையும், மக்களையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். இப்போது அஜய் ஜடேஜாவுடன் தொடர்ந்து உரையாடி கொண்டிருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின்போது சுமார் 2 மாதங்கள் ஆப்கானிஸ்தான் அணியுடன் அஜய் ஜடேஜா இணைந்து பணியாற்றினார். அப்போது ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டது. குறிப்பாக, முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை பொளந்து கட்டி அபார வெற்றியை பெற்றது. மேலும் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தையும் தக்கவைத்ததுடன், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதிபெற்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாகச் செயல்பட்டதற்கு, அஜய் ஜடேஜாவும் முக்கிய காரணம்.

இதையும் படிக்க: பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்| அனுபவ சான்றிதழ் கேட்டதற்காக 3 மாத சம்பளம் கேட்ட நிறுவனம்!

ஆப்கானிஸ்தான் அணியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அஜய் ஜடேஜா, ”உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச்சிறப்பாக இருந்தது. தாம் விளையாண்ட காலத்தில் பாகிஸ்தான் அணி எப்படி இருந்ததோ, அப்படிதான் இப்போது ஆப்கானிஸ்தான் அணி இருக்கிறது. அணியில் உள்ள வீரர்களுக்குள் எந்த ஒளிவுமறைவும் இல்லை. எந்தக் கருத்தையும் வெளிப்படையாகக் கூறுகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

அந்தச் சமயத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடன் அஜய் ஜடேஜா ஆலோசகராகப் பணியாற்றியபோது ஒரு ரூபாய்கூட ஊதியமாகப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுகூட அதே வளர்ச்சியுடன் பயணிக்கும் ஆப்கானிஸ்தான் அணி, அண்மையில் நடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது.

இதையும் படிக்க: ’வாழை’ | ஓடிடியில் ரிலீஸ் எப்போது?.. வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!