சமந்தா எக்ஸ் தளம்
விளையாட்டு

World Pickleball League|சென்னை அணியின் உரிமையை பெற்ற நடிகை சமந்தா! Sports-ல் குதிக்க காரணம் என்ன?

பிரபல நடிகை சமந்தா, World Pickleball League தொடரின் சென்னை அணிக்கு உரிமையாளராகியுள்ளார்.

Prakash J

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த காலங்களில், மையோசிடிஸ் உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இதற்காக படப்பிடிப்புகளில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது, அதிலிருந்து மீண்டு வந்திருக்கும் சமந்தா, பழையபடி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவ்வாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், World Pickleball League தொடரின் சென்னை அணிக்கு உரிமையாளராகியுள்ளார்.

இதுகுறித்து நடிகை சமந்தா, ”என் சிறுவயது முதல் இருந்தே PickleBall விளையாட்டு மிகவும் பிடிக்கும். சென்னை அணியின் உரிமையாளராக நான் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபகாலமாக விளையாட்டுகளில் பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எப்போதுமே இந்தியாவின் வளர்ந்துவரும் விளையாட்டு சூழலின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். எனவே, இளம்பெண்கள் பலரையும் விளையாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்” எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஆரம்பித்த ஒரேநாளில் 10 மில்லியன் சந்தாதாரர்கள்.. உலக சாதனை படைத்த ரொனால்டோவின் யூடியூப் சேனல்!

ஜனவரி 2025-ல் நடைபெற உள்ள இந்தத் தொடரில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய ஏழு நகரங்களை இலக்காகக் கொண்டு ஆறு அணிகள் இறுதி செய்யப்பட உள்ளன. இதில் சென்னை அணியின் உரிமையை சமந்தா கைப்பற்றியுள்ளார்.

ஊறுகாய் பந்து (Pickleball) என்பது டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளின் ஒரு கலவையாகும். என்றாலும், அதன் விதிகளில் இருந்து வேறுபட்டது. அத்துடன் இந்த பந்தின் எடையும் குறைவு. இவ்விளையாட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுகிறார்கள்.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை| கண்டெடுக்கப்பட்ட டைரி.. கிழிக்கப்பட்ட பக்கங்கள்.. சூடுபிடிக்கும் விசாரணை!

இந்த விளையாட்டிலும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் முறை உள்ளது. இது, டென்னிஸ் மைதானத்தின் நான்கின் ஒரு பங்கு அளவுள்ள உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் விளையாடப்படுகிறது. இதன் வலையும் டென்னிஸ் வலையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது.

1965ஆம் ஆண்டு சியாட்டிலுக்கு அருகிலுள்ள பெயின்பிரிட்ஜ் தீவில் ஜோயல் பிரிட்சார், பில் பெல் மற்றும் பார்னி மெக்கல்லம் ஆகியோர் விடுமுறையின்போது இவ்விளையாட்டை தங்கள் குழந்தைகளுக்காக உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

ஜோயலில் மனைவி, ’ஊறுகாய் பந்து’ எனப் பெயரிட்டதாலேயே இந்த விளையாட்டு அப்பெயரால் அழைக்கப்படுவதாக காரணம் சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் மிகவும் பிரபலமான விளையாட்டுக்கு, 2005-ல் அசோசியேஷன் உருவாக்கப்பட்டது. இவ்விளையாட்டு, இந்தியாவில் 2006-ல் கொண்டுவரப்பட்டது. சுனில் வால்வல்கர் என்பவர் அதை இந்தியாவுக்குள் கொண்டு வந்துள்ளார். தற்போது இவ்விளையாட்டு, இந்தியாவின் 16 மாநிலங்களில் விளையாடப்படுகிறது. நம் நாட்டில் மட்டும் இவ்விளையாட்டை, 3,000 பதிவு செய்யப்பட்ட வீரர்கள் விளையாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: கொல்கத்தா மருத்துவர் கொலை | Ex Dean-க்கு எதிராக நிற்கும் பழைய வழக்குகள்.. யார் இந்த சந்தீப் கோஷ்?