விளையாட்டு

நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வாங்கி குவிக்கும் நடிகர் மாதவன் மகன்!

நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வாங்கி குவிக்கும் நடிகர் மாதவன் மகன்!

webteam

கேலோ இந்தியா தொடரில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் 5வது கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜனவரி 30ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 11ஆம் தேதி வரை 8 இடங்களில் நடைபெற்ற இப்போட்டியில் 27 வகையான விளையாட்டுகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 6000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் மகாராஷ்டிரா அணி சார்பில் நீச்சல் பிரிவில் கலந்துகொண்ட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடவுளின் ஆசிர்வாதத்தால் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் பிரிவுகளில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் மற்றும் 800 மீட்டர் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றியுள்ளதாகப் பதிவிட்டுள்ளார். இதோடு கலப்புப் பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாக 5 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வேதாந்த் பெற்று அசத்தியுள்ளார். மாதவன் பதிவிட்டிருக்கும் ட்விட் பதிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

5வது கேலோ இந்தியா யூத் விளையாட்டுத் தொடரில், மகாராஷ்டிரா அணியே பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 56 தங்கம், 55 வெள்ளி மற்றும் 50 வெண்கலம் என மொத்தம், 161 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகளில் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப்பை மகாராஷ்டிரா அணி கைப்பற்றுவது இது இரண்டாவது முறையாகும். இந்தப் பட்டியலில் 128 பதக்கங்களுடன் ஹரியானா 2வது இடத்திலும், 92 பதக்கங்களுடன் மத்தியப் பிரதேசம் 3வது இடத்திலும் உள்ளது. இந்தப் பட்டியலில் 52 பதக்கங்களுடன் தமிழகம் 8வது இடத்தில் உள்ளது.

- ஜெ.பிரகாஷ்