விளையாட்டு

ஓராண்டிற்கு பிறகு களமிறங்கி புதிய மைல்கல்லை எட்டினார் டிவில்லியர்ஸ்

ஓராண்டிற்கு பிறகு களமிறங்கி புதிய மைல்கல்லை எட்டினார் டிவில்லியர்ஸ்

rajakannan

முதல்தர கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் எட்டியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தென் ஆப்ரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் தொடங்கியது. தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத் மைதானத்தில் இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. காயம் காரணமாக தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டூபிளிசிஸ் இடம்பெறாததால், அவருக்குப் பதிலாக டிவில்லியர்ஸ் கேப்டனாக களம் இறங்கினார்.

டாஸ் வென்ற டிவில்லியர்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்கா அணி 78.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. ஏய்டன் மார்கிராம் 125 (204) ரன்கள் எடுத்தார். டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 65 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் குவித்தார்.

இந்த 4 நாள் டெஸ்ட் போட்டி சர்வதேச முதல் தர போட்டிகளில்தான் வரும். டிவில்லியர்ஸ் 3 ரன்கள் எடுத்தபோது முதல்தர போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். ஏற்கனவே கிராம் ஸ்மித், ஹசீம் ஆம்லா, ஜேக் காலீஸ், ஹன்சி குரோனி, பேர்ரி ரிச்சர்டு மற்றும் கெப்ளர் வெஸ்ஸல்ஸ் ஆகிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளர். டிவில்லியர்ஸ் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் 8074 ரன்களும், ஒருநாள் போட்டியில் 9515 ரன்களும், டி20 போட்டியில் 1672 ரன்களும் குவித்துள்ளார்.

இதனையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 16 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. தென் ஆப்ரிக்கா அணி சார்பில் மோனே மார்கல் 3 விக்கெட்டும், பிளெண்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.