விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் யோகா செய்து கொண்டே ரூபிக் கியூபை செய்து காட்டி மாணவி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஹர்ஷ நிவேதா(14). இவர் தனது 5 வயது முதலே யோகா கலையினை முறையாக பயின்று வருகிறார். தற்போது தேள் வடிவிலான விருச்சிகாசனம் செய்துகொண்டே ரூபிக் கியூபை மூன்று முறை சரியாக செய்து காண்பித்தார்.
அதில், 17.01 வினாடிகளில் இவர் செய்தது சாதனையாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞான கெளரி மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதைப் பதிவு செய்த அதிகாரிகள் கின்னஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மாணவி ஏற்கனவே இக்கலையின் மூலமாக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையாளர் விருது, ஆசியா புக் ஆஃப் சாதனையாளர் விருது மற்றும் ரியல் வேர்ல்ட் ரெக்கார்ட் உட்பட மாநில தேசிய அளவிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். யோகாவில் அமெரிக்க பெண்ணின் உலக சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் சாதனையை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாதனை குறித்து மாணவி தெரிவிக்கையில், கடந்த ஓராண்டாக இந்த சாதனைக்காக பயிற்சி மேற்கொண்டதாகவும், கின்னஸ் நிறுவனத்திடம் கடந்த ஒருவருடமாக பதிவு செய்து அனுமதிக்காக காத்திருந்ததாகவும், தற்போது அனுமதி கிடைத்த நிலையில் சாதனை நிகழ்த்தியதாகவும் தெரிவித்தார்.
சாதனை புரிந்த அந்த மாணவிக்கு நினைவுப் பரிசு மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவித்து பேசிய ஆட்சியர், முயற்சியும் பயிற்சியும் இருந்தால் அனைவரும் சாதனை புரியலாம் என்றும், அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வரும் இந்த காலகட்டத்தில் மாணவிகள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கூறினார். இதேபோல், சென்னையை சேர்ந்த சிறுவன் சைக்கிளை மிதித்தபடி, வெறும் 14.32 நொடிகளில் ரூபிக் கியூப் கட்டங்களை வரிசைப்படுத்தி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.