விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை செய்த சிறப்பான, தரமான சம்பவம்!

கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை செய்த சிறப்பான, தரமான சம்பவம்!

webteam

வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு எதிராய் இலங்கை அணி ரசிகர்கள், அவ்வணி செய்த சம்பவத்தை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரின் வெற்றிதான் இந்திய ரசிகர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக உள்ளது. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்திய டி20 அணி, 2-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து, ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியும் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்து கோப்பையைக் கைப்பற்றியது.

வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

இதை இந்திய ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அதிலும் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சாதனையைச் செய்திருக்கிறது. அதாவது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற என்ற மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி எடுத்த 290 ரன்களே இதுவரை சாதனையாக இருந்தது. அதை, இந்திய அணி இன்று இலங்கைக்கு எதிராக முறியடித்துள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 390 எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 22 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தனி ஒருவனாய்ச் சாதித்த சனத் ஜெயசூர்யா!

இந்த வெற்றியை நம் ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில்தான், இலங்கை ரசிகர்கள் இந்தியாவுக்கு எதிராகச் செய்த சிறப்பான சம்பவத்தையும் நினைவுகூர்ந்து வருகின்றனர். கடந்த 2000வது ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கோக்ககோலா சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டி சார்ஜாவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது.

54 ரன்களில் தோல்வியடைந்த இந்தியா!

இப்போட்டியில் அப்போதைய இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரான சனத் ஜெயசூர்யா, 161 பந்துகளில் 189 ரன்கள் குவித்தார். அதில் 21 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடக்கம். பின்னர் இந்த இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி, 26.3 ஓவர்களில் 54 ரன்களில் வீழ்ந்தது. இதையடுத்து இலங்கை அணி 245 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஒற்றை இலக்கில் வீழ்ந்த இந்திய வீரர்கள்!

சவுரவ் கங்குலி தலைமையிலான இந்த அணியில் சச்சின், யுவராஜ் சிங், காம்ப்ளி, ராபின் சிங், சுனில் ஜோஷி, ஜாஹீர் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றும் இந்திய அணி இலங்கையிடம் சுருண்டு போனது. இதில் ராபின் சிங்கைத் தவிர (11 ரன்கள்) மற்ற எல்லா வீரர்களும் ஒற்றை இலக்கை ரன்களிலேயே நடையைக் கட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாம்பவான் சச்சின் 5 ரன்களில் ஆட்டமிழந்திருந்தார். இந்தப் போடியில் சமிந்தா வாஸ் 5 விக்கெட்களையும், முத்தையா முரளிதரன் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். இந்த தரமான சம்பவத்தை நினைவுகூர்ந்த இலங்கை அணி ரசிகர்கள், அதை இன்றைய இந்தியாவின் வெற்றிக்கு எதிராய்த் திருப்பிவிட்டுள்ளனர். மேலும், இலங்கை அணியைவிட இந்திய அணிதான் மிகக் குறைந்த ரன்னில் சுருண்டிருப்பதாகவும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இலங்கை அணி, இன்றைய போட்டியில் 73 ரன்களில்தான் சுருண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

- ஜெ.பிரகாஷ்