பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஐசிசி-யின் கிரிக்கெட்டர் பட்டியல் மற்றும் கிரிக்கெட் அணிகளின் பட்டியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
எந்தவிதமான துறைகளை எடுத்துக்கொண்டாலும் அதில் முன்னேறி முதலிடத்தை பிடிக்கும் ஒவ்வொரு நபருக்கும், தனித்துவமான ஒரு பின்கதை இருக்கும். அதில் அவர்களின் போராட்டம், தோல்விகள், எதிர்கொண்ட சவால்கள் என அத்தனை சறுக்கல்களும், பின் அவர்கள் எழுந்துவந்து சாதித்ததின் காலச்சுவடுகள் எல்லாம் நம்மை ஒரு பாதிப்பிற்குள் தள்ளும். அப்படியாக ஒரு மைதானத்தில் பந்தை பிடித்து போடும் பால் பாய் சிறுவனாக இருந்த ஒரு சிறுவனின், நம்பர் 1 வீரராக மாறவேண்டும் என்ற கனவின் நீட்சிப்பதிப்பாகவே இந்த கட்டுரை இருக்கப்போகிறது.
பால் பையனாக இருந்த மைதானத்திலேயே தொடங்கிய கிரிக்கெட் சகாப்தம்!
2007ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் பந்துகளை எடுத்து போடும் ஒரு பால் பையனாக இருந்த சிறுவன், 7 வருடங்கள் கழித்து 2015ஆம் ஆண்டில் அதே மைதானத்தில் தனது முதல் போட்டியை விளையாடுவான் என்பதும், பின்னர் அவன் உலகின் நம்பர் 1 வீரராக மாறுவான் என்பதையும் யாரும் அறிந்திருக்கவில்லை.
2015ல் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணிக்காக, பாபர் அசாம் மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். கடாபி மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் 60 பந்துகளில் 54 ரன்கள் அடித்திருந்தார் பாபர் அசாம். அதற்கு பின் அவர் நிகழ்த்தி காட்டியதெல்லாம் காலத்திற்கும் நிலைத்து நிற்பவை.
உலக கிரிக்கெட்டில் பாபர் அசாம் சாதனைகள்!
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்: 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 360 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்திருந்தார் பாபர் அசாம். அதில் 3 சதங்களை அவர் அடித்திருந்தார்.
2018ஆம் ஆண்டு டி20 நம்பர் 1 பேட்ஸ்மேன்: பாகிஸ்தான், யுஏஇ ஆடுகளங்களில் மட்டும் தான் அடிக்க முடியும், வெளிநாடுகளில் அவரால் அடிக்க முடியாது என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்தமண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம், பாகிஸ்தானை டி20 நம்பர் 1 அணியாக மாற்றியதோடு, தன்னையும் நம்பர் 1 டி20 வீரராக மாற்றி அசத்தியிருந்தார்.
டி20 போட்டிகளில் விரைவாக 1000 ரன்களை கடந்த வீரர். 26 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் அதை நிகழ்த்தினார்.
குறைவான இன்னிங்களில் 7 ஒருநாள் சதங்களை அடித்த வீரர். 33 இன்னிங்ஸ்களில் செய்து அசத்தியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் விரைவாக 3000 ரன்களை அடித்த ஒரே ஆசியவீரர்.
ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர். 2019 உலகக்கோப்பையில் 474 ரன்கள் அடித்துள்ளார்.
ஒரு நாட்டில் 5 முறை தொடர்ச்சியாக சதங்களை அடித்த ஒரே வீரர். யுஏஇ-ல் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒரு டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த ஒரே கேப்டன். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 196 ரன்களை குவித்திருந்தார். 26 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்.
அனைத்து வடிவங்களிலும் நம்பர் 1ஆக வேண்டுமென்பது ஒரு கனவு-பாபர் அசாம்!
கடந்த 2022ஆம் ஆண்டு பாபர் அசாம் குறித்து பேசியிருந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், “ 100 சதவீதம் பாபர் அசாம் 3 கிரிக்கெட் வடிவங்களிலும் நம்பர் 1 வீரராக வரும் வாய்ப்பு இருக்கிறது. அவர் குவாலிட்டியான வீரர், அனைத்து பார்மேட்டிலும் நம்பர் 1 வீரராக மாறும் திறமை அவரிடம் இருக்கிறது “ என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்து பேசியிருந்த பாபர் அசாம்,” ஒரு வீரராக, அனைத்து ஃபார்மேட்களிலும் நம்பர் 1 ஆக வேண்டும் என்பது கனவு. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும், ஒரு இரண்டு வடிவங்களில் மட்டும் சிறப்பாக செயல்பட்டால், அது ஈசியாக கிடைத்துவிடாது, 3 வடிவங்களில் நம்பர் 1ஆக வேண்டுமென்றால் இடைவெளி இல்லாமல் விளையாட வேண்டியிருக்கும், அதற்கு உங்கள் உடல் தகுதி என்பது முக்கியமான ஒன்று, நான் அந்த முயற்சியை செய்து கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஐசிசி விருதுகளில் அதிக பிரிவில் இடம்பெற்றிருக்கும் ஒரே வீரர் பாபர் அசாம்!
இண்டர்நேசனல் கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கான விருதுகளையும், சிறந்த அணியையும் அறிவிக்கும். அப்படி கடந்த 2022ஆம் ஆண்டின் சிறந்த வீரர்கள் மற்றும் சிறந்த 11வீரர்கள் கொண்ட அணிகளை அறிவித்துள்ளது ஐசிசி.
அப்படி அறிவித்திருக்கும் ஐசிசி-ன் சிறந்த பகுப்பாய்வில் 4 பிரிவுகளில் இடம்பிடித்து அசத்தியுள்ளார்,
பாபர் அசாம் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
மேலும் பாபர் அசாம், ஏற்கனவே 2021ஆம் ஆண்டின் ஐசிசியின் ஒருநாள் வடிவத்திற்கான நம்பர் 1 வீரர் என்ற விருதை பெற்றிருந்த நிலையில், தொடர்ச்சியாக மீண்டும் 2022ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டி வடிவத்திற்கான நம்பர் 1 வீரர் விருதையும் தட்டிச்சென்றுள்ளார்.