விளையாட்டு

உலகக் கோப்பையின் ‘தோனி சிக்ஸை’ சாடிய காம்பீர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

உலகக் கோப்பையின் ‘தோனி சிக்ஸை’ சாடிய காம்பீர் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

webteam

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஏப்ரல் 2ஆம் தேதி என்பது ரசிகர்களால் மறக்கமுடியாத நாள். 2011ஆம் ஆண்டின் இதே நாளில் இந்திய அணி 2வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. மும்பை மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ரசிகர்களை இன்ப வெல்லத்தில் ஆழ்த்தியது. இந்த தினத்தை இன்று சமூக வலைத்தளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொரோனாவிற்கு மத்தியிலும் கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டத்திற்கு இடையே சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்த சர்ச்சைகளுக்கு காரணம் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீரின் ட்வீட் தான். இ.எஸ்.பி.என் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 2011ஆம் ஆண்டின் இதே நாளில் தோனி அடித்த இந்த ஷாட் லட்சக்கணக்கான இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என இன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைக் குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்த கவுதம் காம்பீர், “2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு இந்திய அணியும், அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் தான் காரணம் என்பதை நினைவூட்டுகிறேன். அதிக நேரங்களில் நீங்கள் ஒரு சிக்ஸரை மட்டுமே குறிப்பிடுகிறீர்கள்” என தெரிவித்திருந்தார். இதை அவர் பதிவிட்டது முதலே சர்ச்சையும் பற்றிக்கொண்டது. சிலர் கவுதம் காம்பீருக்கு ஆதரவாக பதிவிட்டனர். அதைத்தொடர்ந்து பலரும் கவுதம் காம்பீரை விமர்சித்து பதிவிட்டனர்.

சிலர் கவுதம் காம்பீருக்கு விளக்கம் அளிக்கும்படி, அந்த சிக்ஸரை அடித்தவுடன் ரசிகர்கள் துள்ளிக்குதித்தனர் என்பதையே இ.எஸ்.பி.என் பதிவு குறிப்பிடுவதாக கூறியிருந்தனர். இவ்வாறாக சர்ச்சைகள் தொடர கவுதம் காம்பீருக்கு எதிரான அலை அதிகரித்துள்ளது. ஏனென்றால் சமூக வலைத்தளங்களில் தோனிக்கு ஒரு பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஒரு அலசல் காண்போம். முதலில் இந்திய அணி 2011ஆம் ஆண்டில் இறுதிப் போட்டி வரை வருவதற்கு சேவாக், காம்பீர், யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், தோனி உள்ளிட்டோரின் பங்கு முக்கியமானதாகும். இறுதிப் போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜெயவர்தனே சதம் அடித்தார். இந்திய அணியில் ஜாகிர்கான் மற்றும் யுவராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில், சேவாக் ரன் எதுவும் எடுக்காமலும், சச்சின் 18 ரன்கள் மட்டுமே எடுத்தும் விக்கெட்டை இழந்தனர். இதனால் இந்திய அணி தடுமாறிப்போனது. அப்போது களத்தில் நின்ற கவுதம் காம்பீர் மற்றும் விராட் கோலி அணிக்கு நம்பிக்கையை கொண்டு வந்தனர். பொறுப்புடன் ஆடிய கோலி 35 (49) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் தொடர்ந்து ஆடிய கவுதம் அரை சதத்தை கடந்தார்.

பின்னர் வந்த தோனி, காம்பீருடன் ஜோடி சேர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 97 ரன்கள் வரை எடுத்த கவுதம் சதம் அடிக்கமால் அவுட் ஆனார். பின்னர் வந்த யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்த தோனி, இலங்கை பந்துவீச்சை சிதறித்தார். வழக்கமாக அதிரடியை வெளிப்படுத்தும் யுவராஜ் உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்பதால் பதட்டத்தில் விளையாடினார். ஆனால் துளியும் பதட்டமின்றி ஆடிய தோனி, இறுதியில் சிக்ஸர் அடித்து வெற்றியை பறித்தார். இதனால் ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.

இறுதிப்போட்டியின் வெற்றிக்கு கோலியும், அதைவிட காம்பீரும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இருப்பினும் அடுத்துதடுத்து விக்கெட்டுகள் சரியும் நிலையில், பந்துகளை வீணடிக்காமல் ரன்களை விளாசிய தோனி அதற்கு சற்று அதிக முக்கியத்துவம் கொண்டவர் என்பதே உண்மை என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். பல போட்டிகளில் தோனி இறங்குவதற்கு வாய்ப்பு கிடைக்காத போதிலும், இறுதிப்போட்டியில் தான் யார் என்பதை தோனி அப்போது நிரூபித்திருந்தார்.