உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 9 மாத கர்ப்பிணியான பெண் பயிற்சியாளர் ஷீலா தாஸ், ஆறு மணிநேர இரட்டை மற்றும் ஒற்றை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில், காந்தி பூங்கா அருகில் உள்ள தனியார் மண்டபத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அணைக்காடு சிலம்ப கூடம் சார்பில், இரட்டை மற்றும் ஒற்றை சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உடற்கல்வி ஆசிரியையும், சர்வதேச முதியோர் தடகள வீராங்கனையுமான திலகவதி தலைமை தாங்கினார்.
மருத்துவர் குணசேகரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணான பெண் பயிற்சியாளர் ஷீலா தாஸ் கலந்துகொண்டு, தொடர்ந்து ஒற்றை சிலம்பம் மூன்று மணி நேரமும், இரட்டை சிலம்பம் மூன்று மணி நேரமும் என, இடைவிடாமல் 6 மணி நேரம் இரட்டை மற்றும் ஒற்றை சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை நடத்தினார்.
இதனை அடுத்து சாதனை புரிந்த கர்ப்பிணிப் பெண்ணை, சமூக ஆர்வலர்கள், உடற்பயிற்சியாளர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவித்தனர். முன்னதாக, சாதனைப் புரிந்த அந்தப் பெண்மணிக்கு மருத்துவர் குழு மூலம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.