விளையாட்டு

தங்கப்பதக்கத்தை குறிவைக்கும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள்

தங்கப்பதக்கத்தை குறிவைக்கும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள்

Sinekadhara

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக இந்தியா சார்பில் பங்கேற்க 9 வீரர்-வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். இவர்களில் எத்தனை பேர் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிற வைக்கிறது.

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை தொடக்கி வைத்தவர் விஜேந்தர் சிங். 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்று சாதித்தார் அவர். இதனைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மகளிர் பிரிவில் பதக்கம் வென்று தேசத்தை பெருமைப்படுத்தினார் மணிப்பூர் நாயகி மேரிகோம். இப்போது கூடுதல் பதக்கங்களை வெல்லும் முனைப்பில் டோக்கியோ பறக்க உள்ளது இந்திய குத்துச்சண்டை அணி.

மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் 3 பேர் ஒலிம்பிக் கோதாவில் பங்கேற்கச் செல்ல உள்ளனர். 60 கிலோ எடை பிரிவில் சிம்ரஞ்சித் கவுர், 69 கிலோ எடை பிரிவில் லவ்லீனா போர்கோஹைன், 75 கிலோ எடை பிரிவில் புஜா ராணி ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

ஆடவர் பிரிவில் 5 பேர் இந்தியா சார்பில் கலந்து கொள்ளவுள்ளனர். 52 கிலோ எடை பிரிவில் அமித் பாங்கல், 63 கிலோ எடை பிரிவில் மணிஷ் கவுஷிக், 69 கிலோ எடை பிரிவில் விகாஷ் கிரிஷன் பங்கேற்கவுள்ளனர். 75 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமாரும், 91 கிலோவுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் சதிஷ் குமாரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் அமித் பாங்கல், விகாஷ் கிரிஷன் ஆகியோர் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக ஜொலிக்கின்றனர். ஹரியானாவைச் சேர்ந்த 25 வயதான அமித் பாங்கல் எதிராளியை அசராமல் தாக்கும் ஆற்றல் படைத்தவர். 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்.

29 வயதான விகாஷ் கிரிஷன் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் களமிறங்க உள்ளார். விஜேந்தர் சிங்கிற்கு பிறகு மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை பெறுகிறார் அவர். ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒருதங்கம் உள்ளிட்ட சில பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் முதன்முறையாக பதக்கம் வெல்லும் தீர தாக்கத்துடன் குத்துக்களை பதிக்க காத்திருக்கிறார் விகாஷ்.