விளையாட்டு

’இரு கால்களும் இல்லை.. அவ்வளவுதானே’ ஜிம்னாஸ்டிக்கில் சாதிக்கும் 8 வயது சிறுமி..!

Veeramani

அமெரிக்காவிலுள்ள ஓகியோ மாநிலத்தை சேர்ந்த பைஜ் கேலண்டைன் என்னும் எட்டுவயது சிறுமி பிறக்குபோதே தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்தவர். ஜிம்னாஸ்டிக்கில் பல சாதனைகளை செய்துவரும் இவர், பயிற்சி எடுக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

இரண்டு கால்களையும் இழந்த இந்த சிறுமியின் ஆர்வம் மற்றும் கடின உழைப்புதான் இப்போது இவரை மிகச்சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக்கியுள்ளது. பிறந்த 18 வது மாதத்திலேயே தனது பயிற்சியை தொடங்கினார் பைஜ் கேலண்டைன். உடல் ஊனம் என்பது இலட்சியத்திற்கான தடையை ஏற்படுத்தாது என்று தனது தொடர் முயற்சியின் மூலமாக இப்போதைய வெற்றிகளின் மூலமாக நிரூபித்து வருகிறார் பைஜ் கேலண்டைன்.

“ பைஜ்க்கு சிறுவயது முதலே விளையாட்டில் ஆர்வம் இருந்ததால், பிறந்த 18 மாதத்திலிருந்தே அவரின் உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளை கொடுத்து வருகிறோம். அப்போதிலிருந்தே அவருக்கு எப்போதும் விளையாட்டை பற்றி  மட்டும்தான் சிந்தனை. தொடர் பயிற்சிகள் மூலமாக அவரின் உடல் வலிமை பலம் பெற்றதால் அவருக்கு ஜிம்னாஸ்டிக்கில் ஆர்வம் வந்தது, நாங்களும் ஊக்குவித்தோம். கடின உழைப்பினால்தான் இப்போது என் மகளால் ஜொலிக்க முடிகிறது” என்கிறார் அவரின் தந்தை.

ஷானேஸ்வில்லே அணிக்காக விளையாடும் பேய்க்கிற்கு பயிற்சியாளர் எஸ்தெர் வேய்பெல் பயிற்சியளிக்கும் வீடியோதான் இப்போது வைராகி வருகிறது.  “ஏதேனும் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வமும், உழைப்பும்தான் சிறுமி பைஜ் கேலண்டைனை, சாதாரண குழந்தைகளுக்கு இணையாக விளையாட்டில் ஜொலிக்கவைக்கிறது. இப்போதே அவர் பல பதக்கங்களையும் பெற்றுள்ளார். ஜிம்னாஸ்டிக் மட்டுமின்றி நீச்சல், வில்வித்தை போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார் இந்த சிறுமி’ என்கிறார்  எஸ்தெர்.