கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்பானிஷ் கால்பந்து லீக்கான லா லிகா தொடரில், ரியல் மாட்ரிட் மற்றும் வலென்சியா அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெற்றது. முதலில் தொடங்கப்பட்ட போட்டியில் பிரேசில் முன்கள வீரரான வினிசியஸ் ஜூனியர் மீது, வலென்சியா ரசிகர்கள் இனவெறி கூச்சலிட்டதை அடுத்து போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அதற்கு பின்னர் வினிசியஸ் போட்டியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை. பின்னர் அவருடைய அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து விளையாடியதாக கூறப்படுகிறது.
ஆனால் சிறிது நேரம் கழித்து வலென்சியா வீரர்களுக்கும், வினிசியஸ் ஜூனியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வினிசியஸ் ஜூனியர் வலென்சியா வீரர் ஒருவரை தாக்கிவிட்டதாக கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவர் களத்தை விட்டு வெளியேறும் போது, இனவெறி கூச்சலிட்ட ரசிகர்களை நோக்கி சண்டைக்கான காரணத்தை சைகை காட்டி வெளியேறினார்.
ஆனால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது குறித்து, வினிசியஸ் ஜூனியர் “இனவெறி தாக்குதலின் உச்சம்” இது என்று குற்றஞ்சாட்டினார். மேலும் இதற்கான முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார். போட்டியில் 1-0 என்ற கணக்கில் வலென்சியாவிடம் ரியல் மாட்ரிட் அணி தோல்வியை தழுவியது.
கறுப்பாக இருக்கும் வினிசியஸ் ஜூனியரை, வலென்சியா ரசிகர்கள் “குரங்கு” என்று கூச்சலிட்டு தாக்குதல் நடத்தினர். இது இந்த தொடரில் அவர் மீது நடத்தப்படும் 10ஆவது இனவெறி தாக்குதல் என்று கூறப்படுகிறது.
இனவெறி தாக்குதலை தொடர்ந்து வலென்சியா வீரர்களுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதால், அதைவைத்தே வேண்டுமென்றே களநடுவர்கள் அவருக்கு ரெட் கார்டு வழங்கியதாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் களத்தில் நடைபெற்ற அனைத்துக்கும் முறையான நடவடிக்கை வேண்டும் என்று பொதுவெளியில் தனது கருத்தை வைத்திருந்தார் வினிசியஸ். லீக் நடத்தும் அதிகாரிகள் மீதும், ஆதரவாளர்கள் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்தார். அவருடைய சமூக ஊடக பதிவிற்கும் லா லிகா நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தன்னுடைய இன்ஸ்டா பதிவில் கருத்து தெரிவித்திருந்த வினிசியஸ், "எனக்கு வழங்கப்பட்ட ரெட் கார்டானது இனவெறியர்களுக்கான பரிசு, இத்தகைய நடவடிக்கைகள் அடங்கிய ஒருபோட்டி, ஒருபோதும் கால்பந்தாகவும் ஒரு விளையாட்டாகவும் கூட இருக்க முடியாது. ஏனென்றால் இது லா லிகா” என்று எழுதியதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது ட்விட்டர் பதிவில் ஒரு வலுவான செய்தியை எடுத்துவந்தார் வினிசியஸ்.
இதில் "ஒரு காலத்தில் ரொனால்டினோ, ரொனால்டோ, கிறிஸ்டியானோ மற்றும் மெஸ்ஸி போன்ற ஜாம்பவான்களுக்கு சொந்தமான சாம்பியன்ஷிப், இப்போது இனவெறியர்களுக்கு சொந்தமாக மாறியுள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.
வினிசியஸின் குற்றச்சாட்டுக்கெல்லாம் முதலில் அமைதி காத்த லா லிகாவிற்கு, பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் வலுக்கப்பட்டது. பல்வேறு முன்னாள் வீரர்கள் வினிசியஸ் ஜூனியருக்காக ஆதரவு குரல் கொடுத்தனர். அதற்கும் மேல் பிரேசில் அதிபர், நட்சத்திர வீரர் இம்பாப்வே, ரியோ பெர்டினாண்ட் மற்றும் ஃபார்முலா ஒன் வீரர் லூயிஸ் ஹாமில்டன், கூடவே ஃபிஃபாவும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தது.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கூறுகையில், "21 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலிலும், ஐரோப்பாவின் பல கால்பந்து மைதானங்களில் இனரீதியான எண்ணங்கள் வலுப்பெறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஃபிஃபா, ஸ்பானிஷ் லீக் மற்றும் பிற நாடுகளில் உள்ள லீக்குகள் அனைத்தும் இனவெறி எண்ணங்களுக்கு எதிராக, உண்மையான நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் கால்பந்து மைதானங்களில் பாசிசம் மற்றும் இனவெறி ஆதிக்கங்கள் உயிர்த்தெழ அனுமதிக்க கூடாது" என்று கூறியிருந்தார்.
வினிசியஸ் குற்றாச்சாட்டுகளுக்கு செவிசாய்க்காத நிலையில் பிரேசில் அதிபர், ஃபிஃபா, ஸ்பேனிஷ் லீக் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கூடியது. அதைத்தொடர்ந்து ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குழு, அரசுடன் இணைந்து வினிசியஸ் ஜூனியருக்கு எதிராக 10 முறை நடந்த இனவெறி கூச்சலை பட்டியலிட்டது. அதுமட்டுமல்லாமல் கூச்சலிட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுவரை 7 ரசிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இனவெறியில் கூச்சலிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல், VAR அம்பயர்களும் 6 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வினிசியஸ் ஜூனியருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்ட விவகாரத்தில், கள நடுவர்களுக்கு சாட்சியமாக முக்கியமான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை என VAR அம்பயர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் அது நிரூபனம் ஆன நிலையில், அவர்களில் 6 அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
என்ன தான் காலங்கள் கடந்தாலும், இன்னும் ஸ்பேனிஷ் கால்பந்து தொடர்களில் இனவெறி இருந்துவருவதாக, முன்னாள் பிரேசில் கால்பந்து வீரர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். “விளையாடுவதை நிறுத்திவிடு குரங்கே” என்று இதற்கு முன்னரும் வினிசியஸ் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.