விளையாட்டு

முடிவுக்கு வந்த 4 வருட காத்திருப்பு: 1204 நாட்களுக்கு பின் ஃபீனிக்ஸ் பறவையாக வந்த விராட்!

முடிவுக்கு வந்த 4 வருட காத்திருப்பு: 1204 நாட்களுக்கு பின் ஃபீனிக்ஸ் பறவையாக வந்த விராட்!

Rishan Vengai

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 4ஆவது டெஸ்ட் போட்டியில், தன்னுடைய டெஸ்ட் சதத்திற்கான வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் விராட் கோலி.

நிகழ்கால கிரிக்கெட் வீரர்களில் தலைசிறந்த வீரர் விராட் கோலி தான் என்று, கிரிக்கெட் வல்லுநர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் ஒப்புக்கொண்ட நிலையில், கொரோனா காலகட்டத்திற்கு இடையில் தன்னுடைய பேட்டிங் ஃபார்மை இழந்த விராட் கோலி, அவருடைய பழைய மேஜிக்கல் பேட்டிங் ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியாமல் தடுமாறி வந்தார்.

விமர்சனங்களால் துளைக்கப்பட்ட விராட் கோலி!

அதற்கு பிறகு 3 வருடங்களாக சதத்தையே பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வந்த விராட் கோலி, தன்னுடைய பழைய ஃபார்மை திரும்ப கொண்டுவரும் முயற்சியில் தோல்வியையே சந்தித்து வந்தார். இந்நிலையில் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பலரும் விராட் கோலியை விமர்சனங்களால் துளைத்து எடுத்தனர். ஒருபுறம் விராட் கோலி அவ்வளவு தான் என்ற விமர்சனமும், மறுபுறம் அவரை ஓய்வெடுக்க சொல்லுங்கள் என்ற கொடூரமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

சர்வதேச போட்டிகளில் 70 சதங்களை பதிவு செய்திருந்த காலத்திற்கும் சிறந்த ஒரு வீரனை, சென்ற இடமெல்லாம் சிதைத்து கொண்டிருந்தனர். தொடர் விமர்சனங்களின் எதிரொலியை தொடர்ந்து, விராட் கோலி 1 மாத காலம் ஓய்வை ஏற்றுக்கொண்டார்.

1 மாத காலம் பேட்டையே தொடவில்லை என்று பகிரங்கமாக அறிவித்த விராட் கோலி!

அந்த ஒரு மாத கால ஓய்விற்கு பிறகு அணிக்கு திரும்பிய விராட் கோலி, தன்னால் ஒரு மாத காலமாய் பேட்டையே தொட முடியவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். மேலும் “நான் எங்கிருக்கிறேன் என்பது நிச்சயம் எனக்கு தெரியும்” என்று கூறினார்.

71ஆவது சதத்தை பதிவு செய்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

ஒருமாத ஓய்விற்கு பிறகு, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை தொடருக்கு திரும்பிய விராட் கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 வடிவத்தில் தனது முதல் சதத்தையும், 71ஆவது சர்வதேச சதத்தையும் எடுத்து விமர்சனம் செய்த அனைவருக்கும் தன்னுடைய பேட்டால் பதிலடி கொடுத்தார்.

அதன் பிறகு அவர் நிகழ்த்தி காட்டியதெல்லாம் ஒரு மேஜிக் நிகழ்வு போல் இருந்தது. அந்த வகையில் 71ஆவது சதத்திற்கு பிறகு 2 ஒருநாள் தொடரில் 72, 73, 74 என அடுத்தடுத்து மேலும் 3 சதங்களை எடுத்துவந்து, எதனால் தான் ஒரு காலத்திற்கும் சிறந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டினார்.

டெஸ்ட் சதத்திற்கான 4 வருட காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

டி20யில் தனது முதல் சதம், ஒருநாள் போட்டிகளில் 46ஆவது சதம் என அடுத்தடுத்து எடுத்து வந்த விராட் கோலி, டெஸ்ட் போட்டிக்கான தன்னுடைய 28ஆவது சதத்தை எடுத்து வருவதில் மட்டும், சொதப்பி கொண்டே இருந்தார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக அவருடைய நிலைத்தன்மை குறைந்துவிட்டதால் தான், அவரால் டெஸ்ட்டில் சதத்தை எடுத்துவர முடியவில்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின், 2ஆவது போட்டியில் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிக்காட்டினார் விராட் கோலி.

அந்த போட்டியில் விராட் கோலி அவுட் கொடுக்கப்பட்டது சர்ச்சைக்குரிய விக்கெட்டாக மாறியது. நல்ல தொடக்கத்தை பெற்றிருந்த கோலி அந்த போட்டியிலேயே சதத்தை எடுத்துவந்திருப்பார் என விராட் கோலியின் ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்திருந்தனர்.

ஆனால் 2ஆவது போட்டியில் விட்ட சதத்தின் வறட்சியை, 4ஆவது டெஸ்ட் போட்டியில் தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன்னதாக டெஸ்ட் சதமடித்திருந்த கோலி, 1204 நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு தன்னுடைய 28ஆவது டெஸ்ட் சதத்தை எடுத்து வந்து அசத்தியுள்ளார்.

அழுத்தம் நிறைந்த போட்டியில், முக்கியமான தருணத்தில் கோலி தன்னுடைய ஃபார்மை எடுத்து வந்திருப்பது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா செல்லும் பட்சத்தில், இது இந்தியாவிற்கு பெரிய பலமாக அமையும் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 472 ரன்களை குவித்துள்ளது. விராட் கோலி 135 ரன்களுடன் களத்தில் நிலைத்து நின்று ஆடி வருகிறார்.