விளையாட்டு

நேற்று தவான்..இன்று ராயுடு - பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கியவர்கள் பட்டியல் !

நேற்று தவான்..இன்று ராயுடு - பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கியவர்கள் பட்டியல் !

rajakannan

பந்துவீச்சு சர்ச்சையில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட முன்னணி வீரர்களே சிக்கியுள்ளனர்.

பந்துவீச்சினை பொறுத்தவரை ஐசிசி விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். பந்தினை வீசும் போதும் உரிய கோணத்தில் கை சுழல வேண்டும். த்ரோ வீசுவது போல் இருக்கக் கூடாது. அப்படி வீசப்பட்டால், அதனை கவனித்து சோதனை செய்து, பந்துவீச தடைகள் விதிக்கப்படும். 

பந்துவீச்சு சர்ச்சையில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட முன்னணி வீரர்களே சிக்கியுள்ளனர். சமீபகாலமாகவும் நிறைய புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. வங்கதேச பந்துவீச்சாளர்கள் தஸ்கின் அகமது (வேகம்), அராபத் சன்னி (சுழல்) இருவரது பந்துவீச்சும் எறிவது போல் உள்ளதாக 2015இல் நடுவர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். பின்னர், அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி அளவை விட முழங்கை கூடுதலாக வளைவதாக கண்டறியப்பட்டது. இதனால் தஸ்கின், சன்னி இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் நீண்ட காலமாக பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கி இருந்தார். ஆனால், தன் மீதான புகாருக்கு அவர் பதில் அளித்துவிட்டார். அதேபோல், பாகிஸ்தானின் சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் இருவரும் சர்ச்சையில் சிக்கினர். சோதனையை எதிர் கொண்டு தொடர்ந்து பந்துவீசினார்கள். 

அந்த வகையில் தற்போது அம்பத்தி ராயுடு பந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் அடுத்த 15 நாட்களுக்குள் பந்துவீச்சு சோதனையை எதிர்கொள்ள வேண்டும். இதற்கு முன்பும், இந்திய அணியில் ஹர்பஜன் சிங், ஷிகார் தவான், பிரயன் ஓஜா உள்ளிட்டோர் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். 

இந்தப் பட்டியலில் ஷிகார் தவான் இருப்பதுதான் ஆச்சர்யம். ஏனென்றால் அவர் ஒருநாள், டி20 போட்டிகளில் பந்துவீசியதில்லை. பகுதி நேர பந்துவீச்சாளர் கிடையாது. இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் போட்டியில் தவான் சர்ச்சைக்குரிய முறையில் பந்துவீசியதாக சர்ச்சை எழுந்தது. சர்ச்சைக்குப் பிறகு தவான் பந்துவீசவே இல்லை.