விளையாட்டு

3வது டெஸ்ட்:பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் சந்தேகம் - ஆஸி.யை வழிநடத்தும் ஸ்மித்?

3வது டெஸ்ட்:பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் சந்தேகம் - ஆஸி.யை வழிநடத்தும் ஸ்மித்?

webteam

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையே பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராபி நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தற்போது 2 போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் முன்னேறி உள்ளது. இந்தத் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வந்தார். 2 டெஸ்ட் போட்டிகள் முடிவுற்ற நிலையில், அவர் திடீரென நாடு திரும்பியுள்ளார். 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்றதால்தான் அவர் நாடு திரும்பினார் என கம்மின்ஸ் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம், ’கம்மின்ஸ் சொந்த விஷயம் காரணமாக நாடு திரும்பியுள்ளார். 3வது போட்டியில் கலந்துகொள்வார்’ எனப் பதிலளித்தது.

அதன்படி, தாயாரின் உடல்நலக் குறைவு காரணமாகத்தான் அவர் ஆஸ்திரேலியா சென்றிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேநேரத்தில், 3வது போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்புவார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில், பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3வது டெஸ்ட்டில் கம்மின்ஸ் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

3வது போட்டியில் கலந்துகொள்ள முடியாது என ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திடம் அவர் உறுதியளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.