விளையாட்டு

நியூசி பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இந்திய பேட்டர்கள்! வாய்ப்பிருந்தும் 450 ரன் மிஸ்ஸிங்!

webteam

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. 3வது மற்றும் கடைசிப் போட்டி இன்று மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் 2 மாற்றங்கள்

இன்றைய போட்டியிலும் வென்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில், ஆறுதல் வெற்றியையாவது பெறும் நோக்கில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் இந்திய அணியைப் பேட் செய்ய பணித்தது. அதற்கு முன்பு இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த இரண்டு போட்டிகளில் இடம்பிடித்து பந்துவீச்சாளர்கள் முகம்மது ஷமி, முகம்மது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் உம்ரான் மாலிக்கும், சாஹலும் சேர்க்கப்பட்டனர்.

தொடக்க பேட்டர்கள் சாதனை

இதையடுத்து தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தவுடன், ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கும் விரட்டினர். அதன்படி இந்த ஜோடி, தொடக்க பார்டனர்ஷிப்பில் புதிய சாதனை படைத்தது. 24.1 ஓவர்களில் இருவரும் இணைந்து 204 ரன்களை எடுத்து பழைய இந்திய இணை மற்றும் இலங்கை இணை எடுத்திருந்த 201 ரன்களை முறியடித்தனர். அத்துடன், இருவரும் சதத்தை நோக்கி நகர்ந்தனர். அந்த வகையில் 2020 ஜனவரிக்குப் பிறகு தன்னுடைய 30வது சதத்தைப் பதிவு செய்தார், கேப்டன் ரோகித் சர்மா. அவர், 85 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். அத்துடன் உலக அளவிலும் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 3வது இடத்துக்கு முன்னேறினார்.

சிக்ஸரில் சாதித்த ரோகித் சர்மா

இன்றைய போட்டியில் அவர் 6 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், இந்தப் பட்டியலில் 270 சிக்ஸர்களுடன் 3வது இடத்தில் இருந்த ஜெயசூர்யாவை முந்தினார். அவர் தற்போது 273 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் அஃப்ரடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். சதத்தை நிறைவு செய்தவுடனேயே பிரேஸ்வெல் பந்துவீச்சில் வீழ்ந்தார். இன்றைய போட்டியில் அவர் சதம் அடித்ததன் மூலம் தன்மீது பலரும் வைத்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதுபோல், தற்போதைய பேட்டிங்கின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் சுபமன் கில்லும் தன் பங்குக்கு சதம் அடித்தார். அவர், தன்னுடைய 4வது சதத்தைப் பதிவு செய்தார். அவரும் சதத்தை நிறைவு செய்தபின் வெளியேறினார். கில், 78 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து டிக்னர் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

நடுநிலை வீரர்கள் தள்ளாட்டம்

இவர்களுடைய சிறப்பான தொடக்கத்தால் இந்திய அணி 400 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்த்திருந்த வேளையில், இருவரும் அடுத்தடுத்து வெளியேறியதாலும், அவர்களுக்குப் பின் வந்த நடுநிலை வீரர்களும் நிலைத்து நிற்காததாலும் அணியின் ரன் ரேட் சரியத் தொடங்கியது. முன்னாள் கேப்டன் விராட் கோலி 36 ரன்களில் வெளியேற, பின்னர் களம் கண்ட கடந்த ஆண்டு இரட்டைச் சத நாயகன் இஷான் கிஷன் 17 ரன்களிலும், இந்தியாவின் 360 வீரரான சூர்யகுமார் யாதவ் 14 ரன்களிலும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களிலும் நடையைக் கட்டினர். என்றாலும் இன்றைய போட்டியில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா பொறுப்புணர்ந்து ஆடினார். அவர் 38 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உதவியுடன் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்கு துணையாக நின்ற ஷர்துல் தாக்கூரும் 25 ரன்கள் எடுத்தார்.

100 ரன் வழங்கிய ஜேக்கப்

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃப்பி மற்றும் டிக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதில் ஜேக்கப் டஃப்பியின் ஓவர்கள் இந்திய வீரர்களால் சிதறடிக்கப்பட்டது. அவர் 10 ஓவர்கள் வீசி 100 ரன்களை வாரி வழங்கியுள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக டிக்னர் 10 ஓவர்கள் வீசி 76 ரன்களை வழங்கியுள்ளார். இந்தியா கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியிலும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

ரன் எடுப்பதற்குள் முதல் விக்கெட்!

இந்திய அணி சார்பில் முதல் ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே பின் ஆலன் விக்கெட்டை சாய்த்தார்.