விளையாட்டு

2 வது போட்டி: மந்தனா மிரட்டலில் இந்திய மகளிர் அணி வெற்றி!

2 வது போட்டி: மந்தனா மிரட்டலில் இந்திய மகளிர் அணி வெற்றி!

webteam

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், ஸ்மிருதி மந்தனாவின் அபார சதத்தால் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, மவுண்ட் மாங்கனுயி-யில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து மகளிர் அணி, களமிறங்கி விளையாடியது.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன் அந்த அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த அணி, 44.2 ஓவர்க ளில் 161 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக நியூசிலாந்து மகளிர் அணி கேப்டன் எமி சாட்டர்த் வெயிட் 71 ரன் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இந்திய அணி தரப்பில், கோஸ்வாமி 3 விக்கெட்டும், பிஸ்ட், பூனம் யாதவ், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதையடுத்து மற்றொரு தொடக்க வீராங்கனை மந்தனாவுடன், தீப்தி சர்மா இணைந்தர். தீப்தி 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, கேப்டன் மிதாலி ராஜ், மந்தனாவுடன் சேர்த்து ஆடினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 நியூசிலாந்து அணி, பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் இவர்களைப் பிரிக்க முடியவில்லை. இதையடுத்து 35.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. மந்தனா 90 ரன்களும் கேப்டன் மிதாலி ராஜ் 63 ரன்களும் எடுத்தனர். 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.