விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி மோசமான தோல்வியை இந்திய அணிக்கு வழங்கியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியை இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
சம்பவம் செய்த ஆஸி. வீரர்கள்.. சரணடைந்த இந்திய அணி!
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிட்சல் ஸ்டார்க்கின் அற்புதமான ஸ்விங்கின் வலையில் சிக்கி, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை கால்களை பயன்படுத்தி சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி களத்தில் நின்றிருந்தார் விராட் கோலி. இருப்பினும் மறுபுறம் ஒருவரும் நிலைத்து நிற்காததால், 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடித்திருந்த கோலி எலிஸின் பந்துவீச்சில் லெக்-பிஃபோர்-விக்கெட்டில் அவுட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில் 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய மிட்சல் ஸ்டார்க் 9ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
37 ஓவர்களில் முடிந்து போன ஒருநாள் போட்டி!
அதிக ரன்கள் குவிக்கப்பட்டு 100 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கும் என்று மைதானத்திற்கு வந்த அனைத்து ரசிகர்களுக்கும், இந்தப் போட்டி மிகுந்த ஏமாற்றத்தையே அளித்தது. இந்திய அணி 26 ஓவர்கள் ஆட்டமிழந்ததால் மீதமுள்ள 24 ஓவர்கள் வீசப்படவில்லை.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஓபனர்கள் டிரவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்துவீசிய அத்தனை இந்திய பந்துவீச்சாளர்களையும் அட்டாக் செய்த மிட்சல் மார்ஸ், 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்.
மறுபுறம் வெறும் பவுண்டரிகளாக விரட்டிய ஹெட் 10 பவுண்டரிகளை விரட்டி அரைசதம் அடித்து அசத்தினார். 2 வீரர்களும் அடுத்தடுத்து அரைசதம் விளாச வெற்றிக்கான 118 ரன்களை வெறும் 11 ஓவர்களிலேயே அடித்து போட்டியை வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா.
100 ஓவர் போட்டியான ஒருநாள் போட்டி ஒரு டி20 போட்டியை போல் வெறும் 37 ஓவர்களில் முடிவடைந்தது, மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தையே அளித்தது.
அதிக பந்துகள் மீதம் வைத்து மோசமான தோல்வி!
11 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா இலக்கை எட்டி வெற்றிபெற்றதால், போட்டியில் வீசப்படாத பந்துகளாக மொத்தம் 234 பந்துகள் எஞ்சியிருந்தது. இந்திய அணியை பொறுத்தவரையில் ஒரு ஒருநாள் போட்டியில் அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் தோல்வியடைந்த மோசமான தோல்வியாக இருந்த போட்டி அமைந்துள்ளது.
இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு ஹமில்டனில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்கு எதிராக 93 ரன்களை விரட்டிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளில் வெற்றிபெற்றது. அந்தப் போட்டியை நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் வெற்றிபெற்றிருந்தது. அதாவது 212 பந்துகள் வீசப்படாமல் மீதமிருந்த நிலையில் படுதோல்வியை சந்திந்திருந்தது இந்திய அணி. தற்போது அதைவிட ஒரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது இந்தியா.