1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் (இப்போது அருண் ஜெட்லி) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடந்தது. இந்தப் போட்டி நடக்கக் கூடாது என்று சில இந்து அமைப்புகள் மைதானத்தின் பிட்சை சேதம் செய்தனர். ஆனால் கடுமையான முயற்சிக்கு பின்பு புதிதாக பிட்ச் அமைக்கப்பட்டு போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடியது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட தொடங்கியது. இலக்கை எட்ட முடியாவிட்டாலும் விக்கெட்டுகளை இழக்காமல் ஆட்டத்தை சமன் செய்துவிடலாம் என்பது பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் எண்ணமாக இருந்தது. அதற்கு ஏற்ப பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தது.
ஆனால் அனில் கும்ப்ளே அபாரமாக பந்து வீச தொடங்கியதும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் எண்ணம் தவிடுபொடியானது. சீட்டுக்கட்டை போல விக்கெட்டுகள் சரிய தொடங்கியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 207 ரன்களில் ஆல் அவுட்டானது, இந்திய அணி 212 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அனில் கும்ப்ளே 26.3 ஓவர்கள் வீசி 74 ரன்களே விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை சாய்த்தார். அதில் 9 ஓவர்கள் மெய்டன்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்த இரண்டாவது வீரர் ஆனார் அனில் கும்ப்ளே. இதற்கு முன்பு இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர் இந்தச் சாதனையை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.