சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க விராட் கோலிக்கு இன்னும் 207 ரன்கள்தான் தேவைப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தென் ஆப்ரிக்காவிற்கு எதிராகவும் இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடர்களில், 207 ரன்கள் அடிக்கும் பட்சத்தில், ராகுல் டிராவிட்டை முந்தி, சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் அடித்த ஆறாவது வீரர் மற்றும் இந்திய வீரர்களில் இரண்டாவது வீரர் என்ற சாதனைகளை விராட் கோலி படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
தற்போது போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 24,002 ரன்களை சர்வதேச குவித்திருக்கிறார். இன்னும் 207 ரன்களை குவிக்கும்பட்சத்தில், 509 போட்டிகளில் 605 இன்னிங்சில் விளையாடி 24,208 ரன்கள் குவித்திருந்த டிராவிட்டின் நெடுநாள் சாதனையை தகர்ப்பார் கோலி. இருப்பினும் இப்பட்டியலில் அதிக ரன்கள் குவித்த இந்தியராக 34,357 ரன்கள் குவித்து நெடுநாட்களாக முதலிடத்தில் இருக்கும் சச்சினின் சாதனையை தாண்டிச் செல்ல கோலிக்கு இன்னும் 10,356 ரன்கள் தேவை. அந்த சாதனையையும் கோலி நிகழ்த்துவாரா?
முன்னதாக 1021 நாட்களுக்கு பிறகு தனது 71 வது சதத்தை விளாசி ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார் கோலி. இதன்மூலம் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் உடன் தனது இடத்தை பகிர்ந்து கொண்டார் கோலி. இந்நிலையில் இன்னும் 207 ரன்கள் விளாசும் பட்சத்தில் டிராவிட்டை முந்தி மற்றொரு சாதனையை நிகழ்த்துவார் கோலி. இந்த தொடரிலேயே அதை நிகழ்த்துவாரா கோலி? பொறுத்திருந்து பார்ப்போம்.!