மரியாதை குறையான, கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என பாக். ரசிகர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் சொயிப் மாலிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் 7வது முறையாக பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்தது. இந்தத் தோல்வியைடுத்து பாகிஸ்தான் கேப்டன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணி மீது பல விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக வசைபாடி வருகின்றனர். வீரர்களை மட்டுமின்றி அவரவர்களின் குடும்பத்தினரையும் மரியாதை குறைவாக கிண்டல் செய்தும், மீம்ஸ் போட்டும் தங்கள் கோபத்தை காட்டி வருகின்றனர். ஹோட்டல் ஒன்றில் பாக்., வீரர்கள் இரவு உணவு உட்கொள்ளும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்த பாக்., ரசிகர்கள் போட்டிக்கும் முதல் நாள் இப்படி சாப்பிட்டால் எப்படி விளையாட முடியும் எனக் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
அந்த வீடியோ குறித்தும், ரசிகர்களின் கிண்டல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள பாக்., கிரிக்கெட் வீரர் சொயிப் மாலிக், ''நாட்டுக்காக நான் 20 வருடங்களுக்கு மேலாக விளையாடி வருகிறேன். ரசிகர்கள் பேச்சுகளை கேட்டு என் சொந்த வாழ்க்கை குறித்து விளக்கம் அளிப்பது வேதனையாக இருக்கிறது. ஹோட்டலில் சாப்பிடும் வீடியோ போட்டிக்கும் முதல் நாள் எடுக்கப்பட்டது அல்ல. அது ஜூன் 13ம் தேதி எடுக்கப்பட்டது. ரசிகர்கள் எங்கள் குடும்பத்தினருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும். மரியாதை குறைவான, கண்ணியமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அது சரியானது அல்ல'' என தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் வீடியோ குறித்து மாலிக்கின் மனைவியும், டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சாவும் கருத்து தெரிவித்துள்ளார். ''அந்த வீடியோ எங்களின் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் தோற்றால் கூட உணவு உண்ண எல்லாரும் அனுமதிக்கப்படுவார்கள். ஒட்டுமொத்த முட்டாள்களே’’ என்று தெரிவித்துள்ளார்.