விளையாட்டு

மகளிர் டி20 கிரிக்கெட்: த்ரில் வெற்றி பெற்றது நியூசிலாந்து!

webteam

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி பரிதாபமாகத் தோல்வியை தழுவியது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போது டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. 3 போட்டி கொண்ட இந்த தொடரில், வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோற்றது. இந்திய ஒரு நாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஆடும் லெவனில் சேர்க்கப் படவில்லை. 

(மந்தனா)

வெஸ்ட் இண்டீசில் நவம்பர் மாதம் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ், ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. அதற்கு முந்தைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக ஆடியும் அவர் சேர்க்கப்படாதது சர்ச்சையானது. டி20 கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் மிதாலியும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டினர். பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீதும் புகார் கூறப்பட்டது. இதனால் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த தொடரிலும் மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கிடையே ஆக்லாந்தில் இன்று நடந்த 2வது டி20 போட்டியிலும் இந்திய அணியின் ஆடும் லெவனில் மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை. 

டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகப்பட்சமாக, 53 பந்தில் 72 ரன்னும் மந்தனா 36 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உட்பட மற்ற யாரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. 

(ரோட்ரிக்ஸ்)

இதையடுத்து, 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து மகளிர் அணி களமிறங்கியது. அந்த அணியின் சுஸி பேட்ஸூம் கேப் டன் எமி சாட்டர்த்வெயிட்டும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இவர்கள் ஆட்டமிழந்ததும் அந்த அணி தடுமாறத் தொடங்கியது. கடைசி ஓவரின் கடைசி பந்து வரை த்ரில்லிங்காக சென்ற போட்டியில், கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து ஹன்னா ரோவே, அணியை வெற்றி பெற வைத்தார். அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுஸி பேட்ஸ் அதிகப்பட்சமாக 62 ரன் எடுத்தார். 

இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை நியூசிலாந்து மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.